கர்நாடகத்தில் பா.ஜனதா அரசின் ஊழலை கண்டித்து 9-ந் தேதி முழு அடைப்பு; டி.கே.சிவக்குமார் அறிவிப்பு
கர்நாடகத்தில் பா.ஜனதா அரசின் ஊழலை கண்டித்து 9-ந் தேதி முழு அடைப்பு நடைபெறும் என்று டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.
துமகூரு:
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் துமகூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பணம் சிக்கியுள்ளது
கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு அனைத்து துறைகளிலும் ஊழல்களை செய்து பணம் கொள்ளையடித்து வருகிறது. சமீபத்தில் அக்கட்சியை சேர்ந்த மாடால் விருபாக்ஷப்பா எம்.எல்.ஏ.வின் மகன் பிரசாந்த் லஞ்சம் வாங்கும்போது பிடிபட்டார். அவரது வீட்டில் ரூ.8 கோடி பணம் சிக்கியுள்ளது. கர்நாடகத்தில் ஊழல் மிதமிஞ்சி போய்விட்டது.
அதனால் பா.ஜனதா அரசின் ஊழலை கண்டித்து வருகிற 9-ந் தேதி கர்நாடகத்தில் முழு அடைப்பு நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த முழு அடைப்பு காலை 9 மணிக்கு தொடங்கி 11 மணி வரை 2 மணி நேரம் நடத்த தீர்மானித்துள்ளோம். பள்ளி-கல்லூரிகள், ஆஸ்பத்திரிகள் வழக்கம் போல் இயங்க அனுமதிக்கப்படும். முழு அடைப்புக்கு வியாபாரிகள், வணிகர்கள் ஆதரவு வழங்க வேண்டும்.
மக்களின் ஆதரவு
முழு அடைப்பின்போது, யாரும் சட்டத்தை தங்களின் கையில் எடுத்து செயல்பட கூடாது. ஊழலை ஒழிக்க மக்களின் ஆதரவை அவசியம் தேவை. அதனால் அனைத்து அமைப்புகளும் முழு அடைப்புக்கு ஆதரவு அளிக்க வேண்டும். எங்கள் கட்சியின் மேலிட தலைவர்களிடம் நாங்கள் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளேன்.
பா.ஜனதாவன் ஊழல்களால் கர்நாடகத்தின் மரியாதைக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் எழுப்பும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆதாரம் எங்கே என்று கேட்கிறார். லோக்அயுக்தா போலீசாரே எம்.எல்.ஏ.வின் மகனை கையும்-களவுமாக பிடித்துள்ளனர். பா.ஜனதா அரசின் ஊழலுக்கு இந்த சாட்சி போதாதா?. இந்த ஊழலுக்கு பொறுப்பேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்ய வேண்டும்.
பதிலளிக்கவில்லை
அரசு ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா, மந்திரிகள் 40 சதவீத கமிஷன் கேட்பதாக கூறி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இதுவரை அதற்கு மோடி பதிலளிக்கவில்லை. பா.ஜனதா அரசின் ஊழல்களால் மக்கள் வெறுத்துப்போய் உள்ளனர்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.