ஆதரவை வாபஸ் பெற தேசியவாத காங்கிரஸ் முடிவு...? மராட்டிய அரசியலில் பரபரப்பு
மராட்டியத்தில் பரபரப்பான அரசியல் சூழலில் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் இன்னும் திறந்தே இருக்கின்றன என எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.;
புனே,
மராட்டியத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியுடன் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. மராட்டிய அரசின் வளர்ச்சியை இலக்காக கொண்டு மராட்டிய விகாஸ் அகாடி அல்லது மகா விகாஸ் அகாடி என பொருள்படும்படியான பெயரை கூட்டணிக்கு சூட்டியுள்ளனர்.
எனினும், கூட்டணிக்குள் பூசல் எழுந்தபடியே இருந்தது. கூட்டணியில் இருந்து கொண்டே சிவசேனாவுக்கு எதிரான வேலையில் கூட்டணியினர் ஈடுபடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனை சிவசேனா அவ்வப்போது வெளிப்படுத்தி, அதிருப்தியும் தெரிவித்தது.
காங்கிரஸ் கட்சியை, தேசியவாத காங்கிரஸ் முதுகில் குத்துகிறது என காங்கிரசின் நானா பட்டோலே கடந்த மே மாதம் குற்றச்சாட்டாக கூறினார்.
நிதி ஒதுக்கீடு செய்வதில் வேற்றுமை அல்லது காங்கிரஸ் உறுப்பினர்களை தேசியவாத காங்கிரசுக்கு இழுப்பது போன்ற வேலைகளில் அக்கட்சி ஈடுபடுகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக மகா விகாஸ் அகாடி கூட்டணி தோன்றியதில் இருந்து இதுபோன்று தேசியவாத காங்கிரஸ் ஈடுபடுகிறது என நேரடி குற்றச்சாட்டாகவே கூறினார்.
இந்த நிலையில், சமீபத்தில் மேல்சபைக்கான தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதில், கட்சி மாறி ஓட்டு போட்டது இதற்கு காரணம் என்ற சந்தேகம் நிலவியது.
அதற்கேற்ப, சிவசேனா தலைவர்களில் ஒருவரான மற்றும் மராட்டிய அமைச்சரவையில் மந்திரியாக உள்ள ஏக்நாத் ஷிண்டேவை கட்சியால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவருடன் 40க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சென்று விட்டனர். இதனை சிவசேனா மூத்த தலைவர் மற்றும் எம்.பி.யான சஞ்சய் ராவத்தும் உறுதிப்படுத்தினார்.
இந்த சர்ச்சையால் கடந்த 2 நாட்களாக மராட்டிய அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து, மராட்டிய சட்டசபை கட்சி தலைவர் பதவியில் இருந்து ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா நீக்கியது.
இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் அசாமின் கவுகாத்தி நகரில் உள்ள ரேடிசன் புளூ ஓட்டலில் ஒன்றாக தங்கி உள்ளனர். மராட்டியத்தில் ஆளும் சிவசேனாவின் 35 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் என மொத்தம் 42 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் ஒன்றாக உள்ள குழு புகைப்படமும் இன்று வெளியானது. கட்சியின் நன்மைக்காக கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேற வேண்டும் என ஷிண்டே கூறியுள்ளார்.
இதுபற்றி குறிப்பிட்ட எம்.பி. சஞ்சய் ராவத், எம்.எல்.ஏ.க்கள் கவுகாத்தியில் இருந்து தொடர்பு கொள்ள கூடாது. அவர்கள் மும்பைக்கு வந்து முதல்-மந்திரியை சந்தித்து அனைத்து விசயங்களை பற்றியும் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
மராட்டிய அரசில் இருந்து நாங்கள் வெளியேற வேண்டும் என அனைத்து எம்.எல்.ஏ.க்களும் விரும்பினால், அதற்கு நாங்கள் (சிவசேனா) தயாராக இருக்கிறோம். ஆனால், 24 மணிநேரத்தில் அவர்கள் மும்பை வரவேண்டும். முதல்-மந்திரியிடம் அதுபற்றி ஆலோசிக்க வேண்டும் என ராவத் கூறியுள்ளார்.
மராட்டியத்தில் ஏற்பட்டு உள்ள அரசியல் நெருக்கடியான சூழலில், தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கான கூட்டம் ஒன்று ஒய்.பி. சவான் மையத்தில் இன்று நடக்கிறது. இதில் அக்கட்சியின் தலைவர் சரத் பவார் மற்றும் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
மராட்டிய அரசியல் சூழல்பற்றி கூட்டணியில் அங்கம் வகிக்கிற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜெயந்த் பாட்டீல் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசும்போது, மராட்டியத்தின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக மராட்டிய விகாஸ் அகாடி அரசு உருவானது. முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஜியுடன் இறுதி வரை நாங்கள் உறுதியாக நிற்போம். இந்த அரசை பாதுகாக்க எங்களால் முடிந்த வரை முயற்சி செய்வோம் என கூறியுள்ளார்.
மராட்டிய விகாஸ் அகாடி அரசில் இருந்து நாங்கள் வெளியேறுவோம் என சஞ்சய் ராவத் கூறியது பற்றி பாட்டீல் பேசும்போது, அவர்கள் ஏதேனும் ஒன்றை நினைத்து கொண்டு இப்படி பேசியிருக்கலாம். நாங்கள் அவர்களிடம் பேசுவோம். அவர்கள் நேரடியாக எங்களிடம் எதுவும் கூறவில்லை. அதுவரை நாங்கள் எதுவும் கூற இயலாது என்று கூறியுள்ளார்.
மராட்டியத்தில் பரபரப்பான அரசியல் சூழலில் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் இன்னும் திறந்தே இருக்கின்றன என எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார். ஆலோசனை கூட்டங்களே வழியை நடத்தி செல்லும் என்று டுவிட்டரில் அவர் தெரிவித்து உள்ளார். இந்நிலையில், ஆதரவை வாபஸ் பெறும் முடிவில் தேசியவாத காங்கிரஸ் உள்ளது என்றும் மராட்டிய அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதனால், மராட்டிய அரசியலில் நிலையற்ற தன்மை தொடர்ந்து நீடிக்கிறது. மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு கவிழும் சூழல் காணப்படுகிறது.