முதல்-மந்திரி அலுவலகத்தில் ஆவணங்கள் மாயமாகவில்லை
முதல்-மந்திரி அலுவலகத்தில் ஆவணங்கள் மாயமாகவில்லை என்று மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
பெங்களூரு, நவ.28-
பெங்களூருவில் விளம்பர விதிமுறைகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களுக்கு அனுமதி கேட்டு நகர வளர்ச்சித்துறை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்திருந்தது. அந்த ஆவணங்கள், நகர வளர்ச்சித்துறைக்கு திரும்பி வரவில்லை என்றும், முதல்-மந்திரியின் அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் மாயமாகி இருப்பதாகவும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் மாயமானது சர்ச்சையையும் ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாக அதிகாரி ராகேஷ் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து எந்த ஒரு ஆவணங்களும் மாயமாகவில்லை. இதுதொடர்பாக வெளியான தகவல்கள் உண்மை இல்லை. அந்த ஆவணங்கள் அனைத்தும் நகர வளர்ச்சித்துறை அலுவலகத்திலேயே இருக்கிறது. ஆவணங்கள் மாயமான விவகாரத்திற்கும் வாக்காளர்கள் தகவல்கள் திருட்டுப்போனதாக கூறப்படுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.