டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு - கடந்து வந்த பாதை

கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-05-10 13:40 GMT

புதுடெல்லி,

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கெஜ்ரிவாலுக்கு வரும் ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. தேசிய அளவில் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வருமாறு;-

* நவம்பர் 2021: டெல்லி அரசு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தியது.

* ஜூலை 2022: டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா, மதுபானக் கொள்கையை உருவாக்கி செயல்படுத்துவதில் நடந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைத்தார்.

* ஆகஸ்ட் 2022: சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சார்பில் முறைகேடுகள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

* செப்டம்பர் 2022: டெல்லி அரசு மதுபானக் கொள்கையை ரத்து செய்தது.

* அக்டோபர் 30, 2023: பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு நவம்பர் 2-ந்தேதி ஆஜராகும்படி கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை முதல் சம்மன் அனுப்பியது.

* டிசம்பர் 2023: டிசம்பர் 21 மற்றும் ஜனவரி 3 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகும்படி கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை மேலும் இரண்டு சம்மன்களை அனுப்பியது.

* ஜனவரி 2024: ஜனவரி 18 மற்றும் பிப்ரவரி 2 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகும்படி கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை மேலும் இரண்டு சம்மன்களை அனுப்பியது.

* பிப்ரவரி 3: சம்மன்களை தவிர்த்ததற்காக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை புகார் அளித்தது.

* பிப்ரவரி 7: அமலாக்கத்துறை புகாரின் அடிப்படையில் கெஜ்ரிவாலுக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

* பிப்ரவரி: தொடர்ந்து பிப்ரவரி 19, 26 மற்றும் மார்ச் 4 ஆகிய தேதிகளில் கெஜ்ரிவால் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்களை அனுப்பியது.

* மார்ச் 7: சம்மன்களை தவிர்த்ததற்காக கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை அளித்த புதிய புகாரின்பேரில் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியது.

* மார்ச் 15: சம்மன்களை தவிர்த்த கெஜ்ரிவாலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க செஷன்ஸ் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

* மார்ச் 16: கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜரான பிறகு, சம்மன்களை தவிர்த்ததற்ககாக அவருக்கு எதிராக அமலாக்கத்துறை அளித்த புகார்களில் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

* மார்ச் 21: கெஜ்ரிவாலுக்கு அனுப்பப்பட்ட சம்மன்களை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவில் கைது செய்யப்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்க டெல்லி ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. சிறிது நேரத்தில் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது.

* மார்ச் 23: தன் மீதான அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்தும், தன்னை அமலாக்கத்துறை காவலில் வைக்க விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும் டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்தார்.

* ஏப்ரல் 9: அமலாக்கத்துறை கைதுக்கு எதிரான கெஜ்ரிவாலின் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

* ஏப்ரல் 10: டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார்.

* ஏப்ரல் 15: கைது நடவடிக்கையை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு குறித்து ஏப்ரல் 24-ந்தேதிக்குள் பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

* ஏப்ரல் 24: கெஜ்ரிவாலின் நடத்தை மூலம் பணமோசடி வழக்கில் அவர் குற்றவாளி என விசாரணை அதிகாரி உறுதி செய்ததாக சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை தெரிவித்தது.

* ஏப்ரல் 27: தன் மீதான 'சட்டவிரோத கைது' நடவடிக்கையின் மூலம் 'சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள்' மற்றும் 'கூட்டாட்சி' அடிப்படையிலான ஜனநாயகத்தின் கோட்பாடுகள் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தாக்குதல் நடந்துள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

* ஏப்ரல் 29: அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பிய பிறகும் கெஜ்ரிவால் ஆஜராகாதது குறித்து சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது. மேலும் அவர் தனது வாக்குமூலத்தை பதிவு செய்யாத காரணத்தால் கைது செய்யப்படுவதை எதிர்க்க முடியுமா? என்றும் கோர்ட்டு கேள்வி எழுப்பியது.

* மே 3: நடப்பு மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

* மே 8: கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது தொடர்பான உத்தரவை மே 10-ந்தேதி வெளியிடுவதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

* மே 10: ஜூன் 1 வரை கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, ஜூன் 2-ந்தேதி அவர் சரணடைந்து மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்