நாட்டில் அரசியல் சாசனம், ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது; சித்தராமையா பேச்சு
நாட்டில் அரசியல் சாசனம், ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதாக சித்தராமையா கூறினார்.;
பெங்களூரு:
உழைக்கும் பலம்
கர்நாடக இளைஞர் காங்கிரஸ் மாநாடு பெங்களூருவில் உள்ள அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு பேசியதாவது:-
நாட்டில் இளைஞர்கள் மீது மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. இளம் சமுதாயத்தினரால் சமூக, பொருளாதார, அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 35 வயதுக்குள் இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை 65 சதவீதமாக உள்ளது. மக்கள்தொகையில் 107 கோடி பேருக்கு உழைக்கும் பலம் உள்ளது. ஆனால் வேலைக்கு செல்வோர் எண்ணிக்கை 38 சதவீதாக உள்ளது.
வேலையின்மை
உலகின் வேறு எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு இளைஞர் சக்தி இல்லை. இந்த சக்தியை பயன்படுத்தி நாட்டை முன்னேற்ற வேண்டும். பிரதமர் மோடி இளைஞர் சக்தியை பயன்படுத்தி கொள்ளவில்லை. நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் தாண்டவமாடுகிறது. நாட்டில் வேலையின்மை 8 சதவீதமாக உள்ளது. இந்த அளவு வேலையில்லா பிரச்சினை முன்பு எப்போதும் இருந்தது இல்லை.
அதனால் இளைஞர்கள் மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். உலகில் வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 164-வது இடத்தில் உள்ளது. மன்மோகன் பிரதமராக இருந்தபோது இந்தியா 3-வது இடத்தில் இருந்தது. மோடி பிரதமரான பிறகு வளர்ச்சியில் இந்தியா பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. பண மதிப்பிழப்பு, கொரோனா, ஜி.எஸ்.டி. வருவதற்கு முன்பு சிறு தொழில்துறையில் 10 கோடி பேர் பணியாற்றி வந்தனர். அந்த எண்ணிக்கை தற்போது 2½ கோடியாக சரிந்துவிட்டது. பிரதமர் மோடி ஆட்சியில் இளைஞர்களுக்கு பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
அக்னிபத் திட்டம்
ராணுவத்தில் தற்போது அக்னிபத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளனர். இதனால் இளைஞர்களுக்கு 4 ஆண்டுகள் மட்டுமே வேலை கிடைக்கும். அதன் பிறகு அந்த வீரர்கள் என்ன செய்வது?. கல்வியும் பயில முடியாது. மீண்டும் அவர்கள் வேலை தேட வேண்டும். இதனால் அந்த வீரர்கள் திசை மாறும் நிலை உண்டாகும். இதுபற்றி இளைஞர்கள் தீவிரமாக யோசிக்க வேண்டும்.
மன்மோகன்சிங் பிரதமராக ஆட்சியில் இருந்த வரை நாட்டின் மொத்த கடன் ரூ.53 லட்சத்து 11 ஆயிரம் கோடியாக இருந்தது. அது தற்போது ரூ.155 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. மோடி பிரதமரான பிறகு ரூ.102 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. நாட்டில் இன்று அரசியல் சாசனம், ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. இதை பாதுகாக்க வேண்டிய கடமை காங்கிரசுக்கு இருக்கிறது.
உயிர்த்தியாகம் செய்தவர்கள்
நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி உயிர்த்தியாகம் செய்தவர்கள் காங்கிரசார். அரசியல் சாசனத்தில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சொல்லவில்லை. சமூக மற்றும் கல்வியில் பின்தங்கியுள்ள பிரிவுகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
ஆனால் பிரதமர் மோடி ஒரே நாளில் அரசியல் சாசனத்தை திருத்தி உயர்ந்த சாதிகளில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளாாட். இது தான் சமூக நீதியை பின்பற்றும் முறையா?. சகிப்புத்தன்மை, கூடி வாழ்வது நமது மந்திரமாக இருக்க வேண்டும். பா.ஜனதாவினர் சர்வாதிகாரத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். அவர்கள் சர்வாதிகாரி ஹிட்லரின் செயல்களை பாராட்டியவர்கள். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜனதா அரசு வீட்டிற்கு சென்றால் நாட்டிற்கும், மக்களுக்கும் நல்லது நடக்கும்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.