டிக்கெட் பரிசோதகர்களை பார்த்த அதிர்ச்சியில் கண்டக்டர் திடீர் சாவு

டிக்கெட் பரிசோதகர்களை பார்த்த அதிர்ச்சியில் கண்டக்டர் திடீரென உயிரிழந்தார்.

Update: 2022-11-01 15:35 GMT

உப்பள்ளி: தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் பகுதியில் வசித்து வருபவர் மகேஷ். இவர் அரசு(கே.எஸ்.ஆர்.டி.சி.) போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலையில் இவர் வழக்கம்போல் பணியில் இருந்தார். இவர் பணியில் இருந்த பஸ் உப்பள்ளி டவுன் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் டவுனில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது பஸ்சை நிறுத்தி கே.எஸ்.ஆர்.டி.சி. அதிகாரி மஞ்சுளா தலைமையில் டிக்கெட் பரிசோதகர்கள் பஸ்சில் ஏறினர். அவர்கள் கண்டக்டரை கண்டிப்புடன் பார்த்தனர். இதனால் பயந்துபோன கண்டக்டர் மகேஷ், திடீரென மயங்கி விழுந்தார்.

இதையடுத்து டிரைவரும், சக பயணிகளும் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பஸ்சில் திடீரென அதிகாரிகளை கண்ட மகேஷ் அதிர்ச்சியில் மாரடைப்பால் மரணம் அடைந்தது தெரியவந்தது. ஆனால் மகேஷ் இறந்தது பற்றி கவலைப்படாமல் அதிகாரிகள் அங்கிருந்து உடனடியாக சென்றுவிட்டனர். ஆஸ்பத்திரிக்கு கூட வந்து அவர்கள் மகேசின் உடலையோ, அவரது குடும்பத்தினரையோ பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுபற்றி அதிருப்தி தெரிவித்த மகேசின் குடும்பத்தினர், பின்னர் இதுகுறித்து வித்யாநகர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்