பெங்களூருவில் கால்வாய்களின் நிலை மோசமாக உள்ளது- குமாரசாமி பேட்டி

பெங்களூருவில் கால்வாய்களின் நிலை மோசமாக உள்ளதாக குமாரசாமி கூறியுள்ளார்.

Update: 2022-05-19 21:54 GMT

பெங்களூரு: பெங்களூருவில் கால்வாய்களின் நிலை மோசமாக உள்ளதாக குமாரசாமி கூறியுள்ளார். முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மழை சேதங்கள்

பெங்களூருவில் கனமழை பெய்து பல்வேறு பகுதிகளில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூருவை சேர்ந்த 7 பேர் மந்திரிகளாக உள்ளனர். இவர்கள் ஏதாவது அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி நிவாரண பணிகளை மேற்கொள்வது குறித்து முடிவு எடுத்தார்களா?. இந்த அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது?. இங்குள்ள மந்திரிகள் தங்களின் தொகுதி மேம்பாட்டிற்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு பெற்றனர். அந்த நிதி எங்கே போனது?.

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெயருக்கு ஒரு சில இடங்களில் மழை சேதங்களை பார்வையிட்டுள்ளார். மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அவர் ஆர்வம் காட்டவில்லை. கே.ஆர்.புரம் தொகுதிக்கு ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதி எங்கே போனது?. பெங்களூருவில் கால்வாய்களின் நிலை மோசமாக உள்ளது. முதல்-மந்திரி உடனடியாக அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும்.

நம்பிக்கை போய்விட்டது

ஏரிகளை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டிவிட்டனர். அதனால் தான் இத்தகைய மழை பாதிப்புகள் ஏற்படுகின்றன. நான் மழை சேதங்களை நாளை (இன்று) பார்வையிடுகிறேன். மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்கள் கட்சி சார்பில் முடிந்த அளவுக்கு உதவிகளை வழங்க உள்ளேன்.

இந்த பா.ஜனதா அரசு மீது இருந்த நம்பிக்கை போய்விட்டது. இங்கு பா.ஜனதா, காங்கிரஸ் கட்சியின் மேயர்கள் தான் இருந்தனர். அவர்கள் எந்த பணிகளையும் செய்யவில்லை. அதனால் மக்கள் நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். பெங்களூருவுக்கு என்று தனி அடையாளம் உள்ளது. அந்த அடையாளத்தை ஏற்படுத்த அடித்தளம் அமைத்தவர் தேவேகவுடா. எஸ்.எம்.கிருஷ்ணா அடித்தளம் அமைத்தார் என்று சொல்வதை ஏற்க முடியாது.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்