வெளுத்து வாங்கும் தென்மேற்கு பருவமழை; குடகு, உடுப்பியில் வெள்ள சேதங்களை முதல்-மந்திரி பார்வையிட்டார்

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை குடகு மற்றும் உடுப்பி மாவட்டங்களில் வெள்ள சேதங்களை பார்வையிட்டார். மேலும் வீடுகளை இழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி அறிவித்தார்.

Update: 2022-07-12 20:42 GMT

பெங்களூரு:

வெளுத்து வாங்கும் மழை

கர்நாடகத்தில் கடந்த மாதம்(ஜூன்) தென் மேற்கு பருவ மழை தொடங்கியது. ஆனால் ஜூன் மாதம் முழுவதும் அவ்வளவாக மழை பெய்யவில்லை. இந்த நிலையில் ஜூலை மாதம் தொடங்கியது முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக இந்த கனமழை கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, மங்களூரு, வட கர்நாடக மாவட்டங்களான பீதர், பாகல்கோட்டை, ஹாவேரி, பெலகாவி, தார்வார், கலபுரகி மற்றும் மலைநாடு மாவட்டங்களான குடகு, சிக்கமகளூரு, ஹாசன், சிவமொக்கா ஆகிய பகுதிகளில் வெளுத்து வாங்கி வருகிறது.

இதனால் கர்நாடகத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரப்பி வழிகின்றன. அதிகப்படியாக குடகு மாவட்டத்தில் ஏராளமான இடங்களில் மண் சரிவு, சாலைகள் துண்டிப்பு, வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன. மேலும் காவிரி கரையோரத்தில் வசித்து வந்த மக்களின் வீடுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதேபோல தட்சிண கன்னடா மாவட்டத்தில் மழை வெள்ளம் தாழ்வான பகுதிகளுக்கு சென்றதால் ஏராளமான வீடுகள் நீரில் மூழ்கிவிட்டது. பல வீடுகள் மழையால் இடித்து தரைமட்டமாகியுள்ளது.

மேலும் மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள மக்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு மண்டபங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அழைத்து சென்று தங்க வைத்து வருகின்றனர்.

விளை பயிர்கள் நாசம்

மராட்டிய மாநிலத்தில் பெய்து வரும் மழையால் வட கர்நாடக மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகளில் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

தட்சிண கன்னடா மாவட்டத்தில் வெள்ள நீரில் காருடன் அடித்து செல்லப்பட்ட 2 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர்களின் விவரங்களை பெறும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். கார்வாரில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாயும், மகளும் இறந்தனர். இதேபோல பெரும்பாலான இடங்களில் மரங்கள் முறிந்து விழுவது மற்றும் பள்ளி மேற்கூரைகள் இடிந்து விழுவது போன்ற சம்பவங்களால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கலபுரகி, பெலகாவி, பீதர், சாம்ராஜ்நகர், தார்வார், மைசூரு, குடகு, சிக்கமகளூரு ஆகிய மாவட்டங்களில் மழை நீர் விவசாய நிலங்களுக்குள் பாய்ந்ததால் மக்காச்சோளம், பீன்ஸ், கேரட், தக்காளி, நெற்பயிர், வாழை, மிளகாய் விளைவிக்கப்பட்ட பல ஆயிரம் ஏக்கர் விளைபயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது.

மழை பாதிப்பால் நிலச்சரிவு, மேம்பாலம், சாலைகள் துண்டிக்கப்பட்ட இடங்களில் மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து அதிகாரிகள் பொக்லைன் வாகனத்தின் உதவியுடன் சாலைகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீட்பு பணிகள் தீவிரம்

இந்நிலையில் மேலும் சில நாட்களுக்கு இந்த கன மழை நீடிக்கும் என்பதால் காவிரி, ஹேமாவதி, பத்ரா, துங்கபத்ரா, அலமட்டி, கட்டபிரபா, மல்லபிரபா அணைகள் மற்றும் ஆற்றுப்பகுதி ஓரங்களில் வசித்து வரும் கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

பொதுமக்கள் ஆறுகளை கடந்து வர முடியாத இடங்களில் இருக்கும் மக்கள் மற்றும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசித்து வரும் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கே.ஆர்.எஸ்.

கனமழை காரணமாக காவிரியின் குறுக்கே மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமம் அருகே அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகர்(கே.ஆர்.எஸ்.) அணைக்கு நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 72 ஆயிரத்து 282 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 71 ஆயிரத்து 90 கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டு உள்ளது. 124.80 அடி தண்ணீர் கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 122.56 கன அடியாக இருந்தது.

இதேபோல் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமம் அருகே கபிலா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2284 அடி தண்ணீர் கொள்ளளவு கொண்ட கபினி அணையில் நேற்று மாலை நிலவரப்படி 2282.51 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 34 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரத்து 333 கன அடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

இந்த இரு அணைகளில் இருந்தும் திறந்துவிடப்பட்ட நீர் திருமகூடலு திருவேணி சங்கமத்தில் ஒன்றாக சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் செல்கிறது. அதன்படி நேற்று இவ்விரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு மொத்தம் வினாடிக்கு ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 423 கன அடி தண்ணீர் சென்றது குறிப்பிடத்தக்கது.

சேதம் அடைந்த வீடுகள்

இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். அவர் நேற்று குடகு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை சேதங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பிறகு அவர் அந்த மாவட்ட அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக குடகு, உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தரகன்னடா மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குடகு மாவட்டத்தில் இயல்பை விட 114 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. இதனால் 2 வீடுகள் முழுமையாகவும், 15 வீடுகள் அதிக சேதமும், 63 வீடுகள் பாதி அளவுக்கு சேதமும் ஏற்பட்டுள்ளது. முழுமையாக சேதம் அடைந்த வீடுகளுக்கு ரூ.5 லட்சமும், தீவிரமாக சேதம் அடைந்த வீடுகளுக்கு ரூ.3 லட்சமும், குறைந்த சேதம் அடைந்த வீடுகளுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும்.

மின்கம்பங்கள்

முதல் கட்டமாக அந்த வீடுகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு மழை பெய்தபோதும் வீடுகள் சேதம் அடைந்தன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. சேதம் அடைந்த மின் கம்பங்களை சரிசெய்யவும் உத்தரவிட்டுள்ளோம். தேசிய இயற்கை பேரிடர் மீட்பு குழுவினர் ஒருங்கிணைந்து செயல்படும்படி உத்தரவிட்டுள்ளேன்.

குடகு மாவட்டத்தில் அடிக்கடி நிலச்சரிவு மற்றும் நில நடுக்கம் ஏற்படுகிறது. இந்த நில நடுக்கம் ஏன்? ஏற்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம். இதற்காக ஒரு குழு டெல்லியில் இருந்து வருகிறது. இந்த குழுவில் புவி சார் அதிகாரிகள், பல்கலைக்கழக ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர். அந்த குழு வழங்கும் அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

உரிய நடவடிக்கை

நில அதிர்வுகள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து அங்கிருக்கும் மக்களை வெளியேற்றி வேறு இடத்தில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். நில நடுக்கத்தை தடுக்க பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ளன. அதை பயன்படுத்துவது குறித்தும் நாங்கள் ஆலோசித்து முடிவு எடுப்போம். அடுத்த ஆண்டு மழை காலத்தின்போது எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கிராமப்புறங்களில் செயல்படை அமைக்க வேண்டும், அங்கு அதிகாரிகள் விழிப்படைந்து பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். மின் பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க ஒரு உதவி மையம் தொடங்கப்படும். கலெக்டரின் வங்கி கணக்கில் போதுமான அளவுக்கு பணம் உள்ளது. இன்னும் தேவைப்பட்டால் நிதி ஒதுக்கப்படும். நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு உரிய உணவு வழங்கும்படி உத்தரவிட்டுள்ளேன். வீடுகளை இழந்து உறவினர்களின் வீடுகளில் உள்ளவர்களுக்கு அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள் வழங்கப்படும்.

தூர்வார ரூ.40 கோடி

அனைத்து தாசில்தார்களின் வங்கி கணக்கிலும் தலா ரூ.25 லட்சம் உள்ளது. கிராம பஞ்சாயத்துகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி வழங்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்று படுகையில் அதிக மண், மணல் நிரம்பியுள்ளது. அங்கு தூர் வார ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆற்றில் ஓடும் நீர் வெளியேறாமல் இருக்கும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

இதையடுத்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உடுப்பி மாவட்டத்துக்கு சென்று மழை வெள்ள சேதங்களை பார்வையிட்டார். மேலும் அங்கு நிவாரண பணிகளை முடுக்கிவிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இன்றும்(புதன்கிழமை) முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மழை வெள்ள சேதங்களை பார்வையிடுகிறார். அவர் முதலில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் ஆய்வு நடத்துகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்