ஆதார் தொடர்பான சுற்றறிக்கையை திரும்ப பெற்றது மத்திய அரசு
ஆதார் அட்டையின் நகலை யாரிடமும் வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தது.
புதுடெல்லி,
ஆதார் அடையாள அட்டை என்பது 12 இலக்க அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும். உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை நாடான இந்தியாவில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடுதழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாள எண் முறையின் முதல் நோக்கம்.
இந்த நிலையில், ஆதார் அட்டையின் நகலை யாரிடமும் வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு இன்று எச்சரிக்கை விடுத்தது. இது குறித்து மத்திய மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளிட்டுள்ள அறிவிப்பில், ஆதார் அட்டைதாரர்கள் தங்கள் ஆதார் அட்டையின் புகைப்பட நகலை யாரிடமும் வழங்க வேண்டாம். ஆதார் நகலை பெறும் நிறுவனங்கள் அதை தவறாக பயன்படுத்தக்கூடும். மாஸ்கட் (Masked) எனப்படும் கடைசி 4 இலக்கங்கள் கொண்ட ஆதார் அட்டையினை பயன்படுத்தவும். பிரவுசிங் சென்டர்கள், பொது கணினியில் இ-ஆதாரை டவுன்லோட் செய்வதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் ஆதார் விவரங்கள் தரவிறக்கம் செய்தால் அதை அங்கிருந்து டெலிட் செய்துவிட வேண்டும். " என்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது
இதனை தொடர்ந்து ஆதார் அட்டையின் நகலை யாரிடமும் வழங்க வேண்டாம் என்ற சுற்றறிக்கையை திரும்பப்பெறுவதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இது குறித்து கூறும்போது, "பத்திரிக்கைச் செய்தியை மக்கள் தவறாகப் புரிந்துகொள்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை கருத்தில் கொண்டு, முன்னதாக வெளியிட்ட சுற்றறிக்கையை திரும்பப்பெறுவதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.