வெள்ளம் பாதித்த 14 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.5,858.60 கோடி விடுவிப்பு

பிரதமர் மோடி தலைமையில், மத்திய மந்திரி அமித்ஷா வழிகாட்டுதலின்படி, நடப்பு ஆண்டில் 21 மாநிலங்களுக்கு ரூ.14,958 கோடிக்கும் கூடுதலான நிதி விடுவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2024-10-02 01:51 GMT

புதுடெல்லி,

நாட்டில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக கனமழை பெய்தது. இதனால், பல்வேறு நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், வெள்ளம் பாதித்த 14 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.5,858.60 கோடி நிதியை விடுவித்து உள்ளது.

கனமழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட அசாம், மிசோரம், கேரளா, திரிபுரா, நாகாலாந்து, குஜராத், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய அரசின் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிப்பார்கள்.

இதேபோன்று, சமீபத்தில் வெள்ளம் பாதித்த பீகார் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கும் இந்த குழுக்கள் அனுப்பி வைக்கப்படும். அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் (என்.டி.ஆர்.எப்.) இருந்து கூடுதலான நிதிக்கு ஒப்புதல் அளிக்கப்படும். இதனை மத்திய உள்விவகார துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

பிரதமர் மோடி தலைமையில் மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வழிகாட்டுதலின்படி, 21 மாநிலங்களுக்கு நடப்பு ஆண்டில் ரூ.14,958 கோடிக்கும் கூடுதலான நிதி விடுவிக்கப்பட்டு உள்ளது.

நிதியுதவி தவிர, வெள்ளம் பாதித்த அனைத்து மாநிலங்களுக்கும் என்.டி.ஆர்.எப். குழுக்கள், ராணுவ பிரிவுகள் மற்றும் விமான படை ஆகியவற்றை மத்திய அரசு அனுப்பி உதவிகளையும் செய்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்