கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி மக்களை வதைக்கும் மத்திய அரசு; காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் சித்தராமையா பேச்சு

மத்திய அரசு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி மக்களை வதைக்கிறது என்று சித்தராமையா கூறினார்.

Update: 2023-03-01 20:57 GMT

பெலகாவி:

மக்களை ஏமாற்றிவிட்டது

பெலகாவியில் காங்கிரசின் மக்கள் குரல் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு பேசியதாவது:-

நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம். ஆனால் பா.ஜனதா 600 வாக்குறுதிகளை கொடுத்து, அதில் 50 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளது. அக்கட்சி மக்களை ஏமாற்றிவிட்டது. மக்களிடம் ஓட்டு கேட்க பா.ஜனதாவுக்கு தகுதி உள்ளதா?. சத்ரபதி சிவாஜி சிலை அமைக்க நான் நிதி ஒதுக்கவில்லை என்று பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். அது முற்றிலும் பொய்.

ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள்

சத்ரபதி சிவாஜி மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவரது சிலை அமைக்க நான் நிதி கேட்டிருந்தால் நிச்சயம் கொடுத்திருப்பேன். நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. இன்று (நேற்று) சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலையை மீண்டும் ரூ.50 உயர்த்தியுள்ளனர். மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.414 ஆக இருந்தது. அது தற்போது ரூ.1,200 ஆக அதிகரித்துள்ளது. மத்திய அரசு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி மக்களை வதைக்கிறது.

பால், தயிர், மோர், நெய், எழுது பொருட்கள் மீது வரி போட்டு மக்களின் ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள். கர்நாடகத்தில் இருந்து மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.4½ லட்சம் கோடி வரி செல்கிறது. ஆனால் கர்நாடகத்திற்கு வெறும் ரூ.50 ஆயிரம் கோடி மட்டுமே மத்திய அரசு வழங்கியுள்ளது. மோடி பிரதமரான பிறகு கர்நாடகத்திற்கு கிடைக்கும் நிதி உதவி குறைந்துவிட்டது.

கர்நாடகத்தின் கடன்

இதனால் கர்நாடக அரசு கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகத்தின் கடன் ரூ.5 லட்சத்து 64 ஆயிரம் கோடியாக அதிகரித்துவிட்டது. கர்நாடகத்தில் உள்ள ஒவ்வொரு கன்னடர் மீதும் ரூ.78 ஆயிரம் கடன் உள்ளது. இந்த கடனை திருப்பி செலுத்த ஆண்டுக்கு அசல்-வட்டி இரண்டும் சோ்த்து ரூ.56 ஆயிரம் கோடி செலுத்த வேண்டும்.

மல்லிகார்ஜூன கார்கேவை காங்கிரஸ் அவமதிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். பா.ஜனதாவில் அத்வானி, முரளிமனோகர் ஜோஷியை ஓரங்கட்டியது யார்?. பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் தானே அவர்களை ஓரங்கட்டினார்கள்?. மக்களுக்கு சேவையாற்றுபவர்கள் ஆட்சிக்கு வர வேண்டுமா? அல்லது பொய் பேசுபவர்கள் ஆட்சிக்கு வர வேண்டுமா?.

உதவித்தொகை

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீடுகளுக்கு இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்குவோம். மக்கள் நிம்மதியாக வாழ காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்