கரும்பு விவசாயி சின்னம் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி இன்று அவசர வழக்காக விசாரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;

Update: 2024-03-17 02:48 GMT

புதுடெல்லி,

தமிழகத்தில் 2010-ம் ஆண்டு சீமான் தலைமையில் தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி, 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் தனித்தே போட்டியிட்டது. முதல் முறை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டாலும், அடுத்த 2 தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் களம் இறங்கியது.

கரும்பு விவசாயி சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டபோது கணிசமான வாக்குகளும் கிடைத்தது. எதிர்வரும் தேர்தலிலும் அதே சின்னம் கிடைக்கும் என்று நாம் தமிழர் கட்சி எதிர்பார்த்தது. ஆனால், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பதிவு பெற்ற கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் சீமான் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக சீமான் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு நேற்று முன்தினம் விசாரித்தது. அப்போது 'கரும்பு விவசாயி சின்னம் கோரும் நாம் தமிழர் கட்சியின் மேல்முறையீட்டு மனுவுக்கு ஏப்ரல் 1-ந்தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும், பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 1-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்குவது தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் நவ்நீத் துக்கர் அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைத்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் கோரிக்கையை ஏற்று இன்று அவசர வழக்காக சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி இன்று அவசர வழக்காக விசாரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்