தறிகெட்டு ஓடி பல்டி அடித்து கவிழ்ந்து மேம்பால சுவரில் அந்தரத்தில் தொங்கிய கார்; பெங்களூரு வாலிபர் பலி
சென்னராயப்பட்டணா அருகே தறிகெட்டு ஓடி பல்டி அடித்து கவிழ்ந்து மேம்பால தடுப்பு சுவரில் கார் அந்தரத்தில் தொங்கிய கோர விபத்தில் பெங்களூரு வாலிபர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஹாசன்:
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா ஷெட்டிஹள்ளி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை 75-ல் நேற்று முன்தினம் இரவு ஒரு கார் வேகமாக ஹாசன் நோக்கி சென்றது. கார் அந்த சாலையில் உள்ள மேம்பாலத்தில் ஏறிய போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி 4 முறை பல்டி அடித்து மேம்பாலத்தின் தடுப்புச்சுவரில் கவிழ்ந்தது.
இந்த கோர விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. சுமார் 20 அடி உயரத்தில் மேம்பால தடுப்புச்சுவரில் அந்தரத்தில் சிக்கியபடி கிடந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த வாலிபர் ஒருவர் பலியானார்.
மேலும் பெண் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். விபத்து பற்றி வாகன ஓட்டிகள் சென்னராயப்பட்டணா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து, படுகாயமடைந்து உயிருக்கு போராடிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பலியான வாலிபரின் உடலை மீட்டு சென்னராயப்பட்டணா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்தில் சிக்கிய காரில் வந்தவர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் பலியானவர் தீரஜ் (வயது 18) என்பதும், காயமடைந்தவர்கள் ஜெகதீஷ், நளினாக்ஷி, துஷ்யந்த் ஆகியோர் என்பதும், பெங்களூருவை சேர்ந்த இவர்கள் ஹாசனுக்கு காரில் வந்த போது இந்த கோர விபத்து நடந்ததும் தெரியவந்தது. மேலும் அதிவேகமாக காரை ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என்பதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.