போதையில் விசாரணையின் போது நீதிபதியை தாக்க முயன்ற சிறுவன்...! இதுவும் கேரளாவில் தான்...!

மாஜிஸ்திரேட்டை தாக்க முயன்ற சிறுவன், உடனடியாக சிறுவர் சீர்திருத்த இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டான். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-05-12 05:35 GMT

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொட்டாரக்கரா அரசு ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த பெண் டாக்டர் வந்தனாதாஸ் குத்தி கொல்லப்பட்டார். போதைக்கு அடிமையான சந்தீப் என்ற வாலிபர் வீட்டில் தகராறு செய்ததால் அவர்கள் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் சந்தீப்பை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவரது உடலில் காயங்கள் இருந்ததால் அதற்கு சிகிச்சை அளிக்க கொட்டாரக்கரா அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு பணியில் இருந்த அரசு டாக்டர் வந்தனா தாஸ், போதை வாலிபர் சந்தீப்புக்கு சிகிச்சை அளித்த போது அவர் கத்திரிகோலால் அவரை சரமாரியாக குத்தி கொன்றார். மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் தாக்கம் குறையும் முன்பு பெண் மாஜிஸ்திரேட்டு ஒருவரை போதைக்கு அடிமையான சிறுவன் ஒருவன் கத்தியால் குத்த முயன்ற சம்பவம் நடந்துள்ளது. அதன்விபரம் வருமாறு:-

திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் போதை பழக்கத்துக்கு அடிமையாகி வீட்டில் உள்ளவர்களுடன் தினமும் தகராறில் ஈடுபட்டு வந்தான். சம்பவத்தன்று அவன் தாயாரிடம் பணம் கேட்டு வாக்குவாதம் செய்தான்.

மேலும் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து தகராறில் ஈடுபட்டான். சிறுவனை கட்டுப்படுத்த முடியாத தாயார், இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து சிறுவனை பிடித்தனர்.

விசாரணைக்கு பின்னர் அவனை சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர். இதற்காக அந்த சிறுவனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

அப்போது இரவு 10 மணி ஆகிவிட்டதால் சிறுவனை சிறுவர் நீதி குழும பெண் மாஜிஸ்திரேட்டு வீட்டுக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனிடம், மாஜிஸ்திரேட்டு சம்பவம் குறித்து கேட்டுக்கொண்டிருந்தார்.

அப்போதும் போதையில் இருந்த சிறுவன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், பெண் மாஜிஸ்திரேட்டை குத்த முயன்றான். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மாஜிஸ்திரேட்டு மற்றும் சிறுவனின் தாயார் இருவரும் அலறினர்.

அதற்குள் அருகில் நின்ற போலீசார், சிறுவனை மடக்கி பிடித்து வீட்டிற்கு வெளியே இழுத்து சென்றனர். இதுபற்றி பெண் மாஜிஸ்திரேட்டு மாவட்ட நீதிபதிக்கு தகவல் தெரிவித்தார்.

இதற்கிடையே மாஜிஸ்திரேட்டை தாக்க முயன்ற சிறுவன், உடனடியாக சிறுவர் சீர்திருத்த இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டான். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் திருவனந்தபுரம் மற்றும் கொச்சி நகரங்களில் தான் போதை பொருள் பயன்பாடு அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.

அதிகமான வழக்குகளும் இங்கு பதிவாகி உள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதை பழக்கம் அதிகரித்து வருவதாகவும் இதனை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்