தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீட்டில், மத்திய நிதி மந்திரி பாகுபாடு காட்டக்கூடாது - வைகோ
நிதி ஒதுக்கீட்டில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாகுபாடு காட்டக்கூடாது என வைகோ பேசினார்.;

புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. பேசியதாவது:-
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்காக, தமிழக அரசுக்கு ரூ.1,100 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளது. தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்கும் வகையில், நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீட்டில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாகுபாடு காட்டக்கூடாது. இதேபோல, 2024-25-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட தொழிலாளர் வரவு, செலவு திட்டத்தை மத்திய அரசின் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பியுள்ளது. இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
மத்திய அரசு ரூ.2,152 கோடி நிதியை தமிழக அரசுக்கு வழங்காமல் மும்மொழி திட்டத்தை பற்றி பேசுகிறது. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கை எங்களுடடையது. இந்த கொள்கை எங்கள் மாணவர்களை இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையச் செய்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.