சிறுவன் துப்பாக்கியால் சுட்டதில் குண்டு பாய்ந்து தம்பி சாவு
ராமநகர் அருகே, சிறுவன் துப்பாக்கியால் சுட்டதில் குண்டு பாய்ந்து தம்பி உயிரிழந்த சம்பவம் நடந்து உள்ளது.
ராமநகர்:-
7 வயது சிறுவன்
ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா கடுசிவனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மல்லேஷ். விவசாயியான இவரது தோட்டத்தில் ஒரு முஸ்லிம் தம்பதி வேலை செய்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு சாதிக் (வயது 16), ஷாமா (7) ஆகிய 2 மகன்கள். இந்த நிலையில் நேற்று காலை மல்லேசின் தோட்டத்தில் தம்பதி வேலை செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது சாதிக்கும், ஷாமாவும் விளையாடி கொண்டு இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் தோட்டத்தில் உள்ள பண்ணை வீட்டிற்குள் சாதிக்கும், ஷாமாவும் சென்றனர். அப்போது அங்கு சுவரில் தொங்க விடப்பட்டு இருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து சாதிக்கும், ஷாமாவும் விளையாடி கொண்டு இருந்ததாக தெரிகிறது. அப்போது சாதிக் எதிர்பாராதவிதமாக டிரிக்கரை அழுத்தி உள்ளான்.
குண்டு பாய்ந்து சாவு
இதனால் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு ஷாமா மீது பாய்ந்தது. இதில் ரத்தவெள்ளத்தில் ஷாமா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதுபற்றி அறிந்ததும் ஷாமாவின் உடலை பார்த்து அவனது பெற்றோர் கதறி அழுதனர். சம்பவம் பற்றி அறிந்ததும் கோடிஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஷாமாவின் உடலை பார்வையிட்டனர். பின்னர் அவனது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் விளையாடி கொண்டு இருந்த போது துப்பாக்கியை எடுத்து டிரிக்கரை அழுத்தியதால் குண்டு துளைத்து ஷாமா உயிரிழந்தது தெரியவந்தது. இந்த நிலையில் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் துப்பாக்கியை வீட்டில் வைத்திருந்ததாக கூறி மல்லேஷ் மீது வழக்குப்பதிவு செய்த கோடிஹள்ளி போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.