தார்வாரில் இடி-மின்னலுடன் பலத்த மழை; வாக்குச்சாவடியில் அமைத்த பந்தல் சரிந்தது

தார்வாரில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் வாக்குச்சாவடியில் அமைக்கப்பட்ட பந்தல் சரிந்தது. மேலும் மழை வெள்ளத்தில் இருசக்கர வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

Update: 2023-05-09 20:21 GMT

தார்வார்:

தார்வாரில் மழை

தார்வார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென மதிய வேளையில் பலத்த மழை பெய்தது. இடி-மின்னலுடனும், சூறாவளி காற்றுடனும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல பெருக்கெடுத்து ஓடியது. சுமார் 3 அடி உயரத்துக்கு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் இருசக்கர வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. உப்பள்ளி டவுன் கேசுவாப்பூர் சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

தாஜ்பான்பேட்டையில் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பல இடங்களில் மரங்கள் வேரோடு சரிந்து விழுந்தன. சில இடங்களில் மரங்கள் சரிந்து மின்கம்பங்கள் மீது விழுந்ததால் மின் இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதுபோல் கேசுவாப்பூர் சாலை சங்கர் நகரில் உள்ள அரசு பி.யூ. கல்லூரியில் தேர்தல் பணியாளர்கள் வந்து வாக்குச்சாவடிகளுக்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தளவாட பொருட்களை எடுத்துச் செல்ல வசதியாக பெரிய அளவில் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தன.

பந்தல் சரிந்தது

மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த பந்தல் சரிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் சில மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அடங்கிய பெட்டிகள்(பேலட்கள்) சேதம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. பலத்த மழை காரணமாக தார்வாரில் நேற்று பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது.

இதுபோல் சிக்கமகளூரு மாவட்டத்திலும் இடி-மின்னலுடனும், சூறாவளி காற்றுடனும் பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மழை வெள்ளம் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்