மைசூரு அருகே நடந்த கோர விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்கள் அடக்கம்
மைசூரு அருகே நடந்த கோர விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்களும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவர்களது உடல்களைப் பார்த்து குடும்பத்தினரும், கிராம மக்களும் கதறி அழுதனர்.;
பெங்களூரு:-
விபத்து
மைசூரு மாவட்டம் குருபூர் கிராமம் அருகே நேற்று முன்தினம் ஒரு காரும், தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காரில் பயணித்து வந்த பல்லாரி (மாவட்டம்) தாலுகா சங்கனகல்லு கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுநாத்(வயது 35), பூர்ணிமா(30), பவன்(10), கார்த்திக்(8), சந்தீப்(24), சுஜாதா(40), கொட்ரேஷ்(45), காயத்திரி(35), ஸ்ரேயா(3) ஆகிய 9 பேர் மற்றும் கார் டிரைவர் என 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மேலும் ஜனார்த்தன்(45), அவரது மகன் புனித்(4), சசிக்குமார்(24) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தற்போது சிகிச்சைக்காக மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கவலைக்கிடம்
அதுபோல் தனியார் பஸ்சில் வந்த ஒரு குழந்தையும் படுகாயம் அடைந்துள்ளது. அந்த குழந்தையும் மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறது. இதில் சசிக்குமாரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சங்கனகல்லு கிராமத்தைச் சேர்ந்த இவர்கள் உறவினர்கள் ஆவர். அங்கிருந்து ரெயில் மூலம் அவர்கள் மைசூருவுக்கு சுற்றுலா வந்திருந்தனர். மைசூருவில் ஒரு காரை வாடகைக்கு எடுத்து மைசூரு மற்றும் சாம்ராஜ்நகர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர். கடைசியாக அவர்கள் சாம்ராஜ்நகர் மாவட்டம் பிளிகிரி ரங்கணபெட்டா மலையில் உள்ள பிளிகிரி ரங்கநாதசாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
டிரைவரின் அலட்சியம்
அதையடுத்து அவர்கள் மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு மாலை 5 மணிக்கு மைசூரு ரெயில் நிலையத்தில் இருந்து பல்லாரிக்கு செல்லும் ரெயிலை பிடிக்கவும் அவர்கள் திட்டமிட்டு இருந்தனர். மேலும் அவர்கள் அந்த ரெயிலில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். இதற்காக அவர்கள் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் இருந்து மைசூருவுக்கு வந்தபோது குருபூர் கிராமம் அருகே கொள்ளேகால் சாலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இந்த விபத்துக்கு கார் டிரைவரின் அலட்சியமே முக்கிய காரணம் என்று போலீசார் தெரிவித்து இருக்கிறார்கள். அதாவது அவர் வளைவில் திரும்பும்போது அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் காரை ஓட்டி வந்ததுதான் விபத்துக்கு முக்கிய காரணம் என்று போலீசார் கூறுகிறார்கள்.
4 ஆம்புலன்சுகளில்...
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் விபத்தில் சிக்கிய தனியார் பஸ்சின் முன்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது. இதற்கிடையே நேற்று அதிகாலை 3 மணியளவில் டி.நரசிப்புரா அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடிந்து மஞ்சுநாத் உள்ளிட்ட 9 பேரின் உடல்களும் ஆம்புலன்சுகள் மூலம் பல்லாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதாவது ஆஸ்பத்திரிக்கு விபத்தில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினர் நேரில் வந்து அவர்களது உடல்களை பெற்றுச் சென்றனர். மொத்தம் 4 ஆம்புலன்சுகளில் 9 பேரின் உடல்களும் அனுப்பி வைக்கப்பட்டன.
கதறி அழுதனர்
நேற்று மதிய வேளையில் அவர்களது உடல்கள் அவர்களுடைய சொந்த கிராமமான சங்கனகல்லு கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர்களது உடல்களைப் பார்த்து அவர்களுடைய குடும்பத்தினரும், கிராம மக்களும் கதறி அழுதது கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.
ஏனெனில் ஒரே கிராமத்தில் 9 பேர் பலியானதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. அதையடுத்து அவர்களது உடல்களுக்கு கிராம மக்களும், குடும்பத்தினரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர்கள் அனைவருடைய உடல்களும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.