நடுக்கடலில் பாறையில் மோதி படகு மூழ்கியது; 17 மீனவர்கள் பத்திரமாக மீட்பு

குமட்டா அருகே நடுக்கடலில் பாறையில் மோதி படகு மூழ்கியது. இதில் இருந்த 17 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.;

Update: 2023-01-21 18:45 GMT

மங்களூரு:

பாறையில் படகு மோதியது

உத்தரகன்னடா மாவட்டம் குமட்டா தாலுகா கோட்லே பகுதியில் இருந்து நேற்று முன்தினம் சுதாகர் கர்வி என்பவருக்கு சொந்தமான 'ஸ்ரீதேவி அனுக்ரா' என்ற படகில் 17 மீனவர்கள் மீன்பிடிக்க அரபிக்கடலுக்கு சென்றனர். அப்போது அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துவிட்டு கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக நடுக்கடலில் இருந்த பாறையில் படகு மோதியதாக தெரிகிறது. இதனால் படகு சேதமடைந்தது. மேலும் படகிற்குள் தண்ணீர் நுழைய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள், உடனடியாக பக்கத்தில் மீன்பிடித்து கொண்டிருந்த சக மீனவர்களுக்கும், கடலோர காவல் படையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

17 மீனவர்கள் மீட்பு

தண்ணீர் நுழைந்ததால் படகு கொஞ்சம், கொஞ்சமாக கடலுக்குள் மூழ்க தொடங்கியது. இதனால் மீனவர்கள் அனைவரும் ஒரு முனைக்கு வந்து பத்திரமாக இருந்தனர். அதற்குள் அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் படகுகளில் விரைந்து வந்து, 17 மீனவர்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே கடலோர காவல் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் கடலோர காவல் படையினர் மற்றும் மீனவர்கள் சேர்ந்து, மூழ்கிய படகில் இருந்த 17 மீனவர்களை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட 17 பேரும் சக மீனவர்களின் படகுகளில் கரைக்கு அழைத்து வரப்பட்டனர். மீனவர்கள் மீட்கப்பட்ட சிறிது நேரத்தில் அந்த படகு கடலுக்குள் முழுமையாக மூழ்கியது.

ரூ.10 லட்சம் நஷ்டம்

படகுடன் சேர்ந்து மீனவர்களின் வலை மற்றும் இதர பொருட்களும் கடலில் மூழ்கியது. இதனால் மீனவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்