ெகம்பேகவுடா சிலை திறப்பு: அரசியல் நோக்கத்தை முன்வைத்து விழாவை நடத்திய பா.ஜனதா அரசு - டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு
அரசியல் நோக்கத்தை முன்வைத்து பா.ஜனதா அரசு கெம்பேகவுடா விழாவை நடத்தியுள்ளதாக டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.;
பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மாநிலத்தின் அடையாளம்
கர்நாடக வரலாற்றில் கெம்பேகவுடா, கெங்கல் அனுமந்தய்யா, முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோர் முக்கிய பங்காற்றியுள்ளனர். அவர்களுடன் தேவேகவுடா நமது மாநிலத்தின் அடையாளத்தை பெரிய அளவுக்கு உயர்த்தியுள்ளார். விமான நிலையத்திற்கு கெம்பேகவுடா பெயர் சூட்ட முதல்-மந்திரிகளாக இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா, வீரப்பமொய்லி ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தோம்.
இந்த விமான நிலையம் உருவாக்கப்பட்டபோது நான் நகர வளர்ச்சித்துறை மந்திரியாக இருந்தேன். விமான நிலையம் அமைக்க ஏக்கர் ரூ.6 லட்சம் விலையில் 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வழங்கினோம். அதுமட்டுமின்றி 2,500 ஏக்கர் நிலத்தை தனியாரிடம் இருந்து வாங்கி வழங்கினோம். அரசு கூறியிருந்தால் அந்த விமான நிலையத்தை நிர்வகிக்கும் நிறுவனமே கெம்பேகவுடாவுக்கு சிலை அமைத்திருக்கும்.
அரசியல் செய்துள்ளனர்
இந்த ஆட்சியாளர்களுக்கு கமிஷன் தேவைப்பட்டிருக்குமா? அல்லது வேறு நோக்கத்திற்காக அரசே கெம்பேகவுடா சிலையை நிறுவியதா? என்று தெரியவில்லை. சிலை திறப்பு விழாவுக்கு எங்களை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை. பா.ஜனதா அரசு ஒவ்வொரு நிலையிலும் தனது அரசியல் நோக்கத்தை முன்வைத்து விழாவை நடத்தி முடித்துள்ளது. மகான்களின் சிலைகளுக்கு மாலை அணிவிப்பதிலும் அரசியல் செய்துள்ளனர்.
இந்த அரசுக்கு நானோ, தேவேகவுடாவோ, குமாரசாமியோ தேவை இல்லை. தேர்தல், ஓட்டு வங்கி மட்டுமே முக்கியம். இந்த அரசிடம் இருந்து எதையும் எதிர்பார்க்க கூடாது. அவ்வாறு எதிர்பார்த்தால் அது தவறாகிவிடும். பிரதமர் மோடியிடம் நாங்கள் பல்வேறு கேள்விகளை கேட்டு கடிதம் எழுதி இருந்தோம். அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. இது இரட்டை என்ஜின் அரசு அல்ல, பழுதான என்ஜின் அரசு. கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உள்பட யாருக்கும் நிவாரணம் வழங்கவில்லை.
முடிவு செய்வார்கள்
ஆதிசுஞ்சனகிரி மடாதிபதியின் தோள் மீது மந்திரி ஒருவர் கை வைத்துள்ளார். இந்த விவகாரத்தை மக்களிடமே விட்டு விடுகிறேன். யார் நல்லவர்கள் என்று அவர்கள் முடிவு செய்வார்கள். பிரதமர் மோடி கர்நாடகத்திற்கு ஏதாவது அறிவிப்புகளை வெளியிடுவார் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் அவர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இது ஏமாற்றம் அளிக்கிறது.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.