பிபிசி அலுவலக சோதனை: ஜனநாயகத்தில் எந்த வரையறைக்குள் பொருந்தும்? - உத்தவ் தாக்கரே கேள்வி
பி.பி.சி. அலுவலகத்தில் நடந்த வருமான வரி சோதனைக்கு உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.;
மும்பை,
குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பாக 2 ஆவணப்படங்களை சமீபத்தில் பி.பி.சி. நிறுவனம் வெளியிட்டது. இது இந்தியாவில் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பி.பி.சி. அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக உத்தவ் தாக்கரே கூறுகையில்,
ஊடக அலுவலகத்தில் சோதனை நடத்துவது ஜனநாயகத்தில் எந்த வரையறைக்குள் பொருந்தும்?. நீங்கள் (மத்தியஅரசு) என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் நாங்கள் அதற்கு எதிராக குரல் எழுப்ப கூடாது. அப்படி குரல் எழுப்பினால், அரசு ஒடுக்கி விடும். நாட்டில் கொடூரமான போக்கு தலை தூக்க முயற்சிக்கிறது. நாம் ஒன்று சேராவிட்டால், அது முழுநாட்டையும் விழுங்கிவிடும்" என்றார்.