43 ஆண்டுகள் பழமையான ஆற்றுப்பாலம் இடிந்தது; 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

இரியூர் அருகே 43 ஆண்டுகள் பழமையான ஆற்றுப்பாலம் இடிந்தது. இதனால் 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-21 21:26 GMT

பெங்களூரு: இரியூர் அருகே 43 ஆண்டுகள் பழமையான ஆற்றுப்பாலம் இடிந்தது. இதனால் 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

சுவர்ணமுகி ஆற்றுப்பாலம்

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகா ஜவகொண்டனஹள்ளி கிராமத்தின் அருகே சுவர்ணமுகி ஆறு ஓடுகிறது. இந்த கிராமத்தில் சுவர்ணமுகி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த பாலம் கடந்த 1979-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. 43 ஆண்டுகள் பழமையான இந்த பாலம் மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டது. கடந்த மாதம் இரியூர் பகுதியில் பலத்த மழை கொட்டியதால் சுவர்ணமுகி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இதனால் அந்த பாலத்தை தாண்டி வெள்ளம் ஓடியது. 10 நாட்கள் வரை இந்த பாலத்தின் ேமலே வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதன்காரணமாக ஆற்றுப்பாலத்தில் விரிசல் விழுந்தது.

இடிந்து விழுந்தது

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் அந்த ஆற்றுப்பாலம் திடீரென்று இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பாலத்தில் யாரும் செல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார், அங்கு சென்ற பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று காலை இரியூர் தாசில்தார் சுவர்ணமுகி ஆற்று பாலம் பகுதிக்கு சென்று பார்வையிட்டார். மேலும் வாகனங்கள் எதுவும் வராமல் தடுக்க இருபுறமும் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பாலத்தின் அருகே யாரும் செல்ல வேண்டாம் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து துண்டிப்பு

ஜவகொண்டனஹள்ளி கிராமத்தில் சுவர்ணமுகி ஆற்றின் குறுக்கே அமைந்திருந்த இந்த பாலம் தான் சுற்றி உள்ள மைதனஹள்ளி, சமுத்திரஹள்ளி, கோடிஹள்ளி உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு இணைப்பாக இருந்தது. தற்போது இந்த பாலம் இடிந்து விழுந்துள்ளதால், 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்தப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்