14-வது சர்வதேச பெங்களூரு விமான கண்காட்சி நிறைவடைந்தது

14-வது சர்வதேச பெங்களூரு விமான கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. கடைசி நாளில் விமான சாகசத்தை பார்க்க பொதுமக்கள் குவிந்ததால் எலகங்காவில் வாகன நெரிசல் உண்டானது.

Update: 2023-02-17 20:37 GMT

பெங்களூரு:-

விமான கண்காட்சி

ராணுவத்துறை சார்பில் 14-வது பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி கடந்த 13-ந் தேதி பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் தொடங்கியது. பிரதமர் மோடி நேரில் வந்து கண்காட்சியை தொடங்கி வைத்தார். அவர் ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டும் என்றும், இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்துவோம் என்றும் பேசினார்.

இந்த கண்காட்சியில் 800-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டன. இவற்றில் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களும் அடங்கும். அமெரிக்கா, ரஷியா உள்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் ராணுவ மந்திரிகள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சியில் இந்தியாவின் எச்.ஏ.எல். உள்பட பல்வேறு நாடுகளின் போர் விமானங்கள் சாகசம் புரிந்தன.

ஒத்திகை நிகழ்ச்சி

முதல் 3 நாட்கள் வணிக ரீதியிலான பிரமுகர்களுக்கும், கடைசி 2 நாட்கள் பொதுமக்களுக்கும் விமான சாகசங்களை பார்க்க அனுமதி அளிக்கப்பட்டது. முதல் நாளுக்கு முன்பு அதாவது 12-ந் தேதி விமான சாகச ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதை பார்க்க சென்றவர்கள், எலகங்கா பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறினர்.

அன்றைய தினம் காலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 2 மணி நேரம் ஆனது. அந்த அளவுக்கு வாகனங்கள் ஸ்தம்பித்து போயின. இதனால் 8.30 மணிக்கு விமான நிலையத்திற்கு செல்ல வேண்டியவர்கள் 3 மணி நேரம் தாமதமாக செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த சாகசத்தில் ரபேல், சுகோய், தேஜஸ் போன்ற விமானங்கள் தனது திறனை வெளிப்படுத்தின.

பார்த்து மகிழ்ந்தனர்

அமெரிக்காவின் எப்-35, பி-1பி லான்சர்ஸ், எப்-16, எப்-18 போன்ற அதிநவீன போர் விமானங்களும் வானில் சாகசம் புரிந்து, மக்களை மகிழ்வித்தன. இந்தியாவின் சூர்ய கிரண், சாரங் போர் ஹெலிகாப்டர்கள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்கும் வகையில் சாகசம் செய்தன. இந்த கண்காட்சியில் மந்தன், பந்தன் பெயர்களில் ராணுவ மந்திரிகள் மாநாடு, தொழில் நிறுவனங்களின் தலைவர்களின் மாநாடு நடத்தப்பட்டது. இதில் ரூ.80 ஆயிரம் கோடிக்கு தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

இந்த கண்காட்சியில் எச்.ஏ.எல்., இஸ்ரோ, பி.இ.எல்., ராணுவ ஆராய்ச்சி-வளர்ச்சி நிறுவனம் உள்ளிட்டவை தங்களின் அரங்குகளை அமைத்திருந்தன. உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் வருகை தந்து கண்காட்சியை பார்வையிட்டனர். கடைசி நாளான நேற்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் எலகங்காவில் குவிந்தனர். இதனால் அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் ரோட்டில் வாகனத்தை நிறுத்திவிட்டு விமான சாகசத்தை பாா்த்து மகிழ்ந்தனர்.

எச்.ஏ.எல். விமானத்தில் மீண்டும் ஆஞ்சநேயர் படம்

விமான கண்காட்சியில் எச்.ஏ.எல். நிறுவனத்தின் பயிற்சி விமானத்தின் மேல் பரப்பில் ஆஞ்சநேயர் படம் அச்சிடப்பட்டு இருந்தது. அதன் மீது புயல் வருகிறது என்றும் எழுதப்பட்டு இருந்தது.

தனது பலத்தை வெளிப்படுத்தும் வகையில் அந்த படம் இடம் பெற்றதாக எச்.ஏ.எல். நிறுவன அதிகாரிகள் கூறினர். ஆனால் போர் விமானத்தில் ஆஞ்சநேயர் படம் அச்சிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. சிலர் அதற்கு எதிர்ப்பும் தெரிவித்தனர். இதையடுத்து அந்த நிறுவனம் ஆஞ்சநேயர் படத்தை அகற்றியது. இந்த நிலையில் கடைசி நாளில் அந்த போர் விமானத்தின் மீது ஆஞ்சநேயர் படம் மீண்டும் அச்சிடப்பட்டு இருந்தது.

விமான கண்காட்சியை 2 லட்சம் பேர் பார்த்து ரசித்தனர்

விமான கண்காட்சியை பார்க்க முதல் 3 நாட்கள் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் நேற்று முன்தினமும், நேற்றும் விமான கண்காட்சியை பொதுமக்கள் விமானப்படை தளத்திற்கு நேரில் சென்று பார்த்து ரசித்தார்கள். இதற்காக ஒரு நபருக்கு ரூ.2,500 கட்டணம் வசூலிக்கப்பட்டது. எலகங்கா விமானப்படை தளத்தில் காலை 9.30 மணியில் இருந்து காலை 11 மணிவரையும், அதுபோல் மதியம் 2 மணியில் இருந்து மதியம் 3.30 மணி வரையிலும் 2 முறை விமானங்களின் சாகசங்கள் நடைபெற்றிருந்தது. இந்த சாகசங்களை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்து இருப்பதாக விமானப்படை அதிகாரி அஜல் மல்கோத்ரா தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்