மக்களவைத்தேர்தலில் முதல்முறை வாக்காளர்கள் வாக்குகளை தவறாமல் செலுத்த வேண்டும் - பிரதமர் மோடி

3 மாதங்களுக்கு மனதின் குரல் நிகழ்ச்சி கிடையாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.;

Update: 2024-02-25 07:18 GMT

புதுடெல்லி,

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் ( மன் கி பாத் ) எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக உரையாற்றி வருகிறார். இந்த வகையில், இன்றைய உரை 110வது மாதத்தின் உரை. இதில் அவர் கூறியதாவது:

மார்ச் 8 ல் பெண்கள் தினத்தை நாம் கொண்டாட உள்ளோம். நாட்டின் வளர்ச்சி பயணத்தில் பெண்களின் பங்களிப்புக்கு மரியாதை செய்ய இந்த நாள் சிறப்பான நாள் ஆகும். பெண்களுக்கு சம வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே, உலகம் வளர்ச்சி பெறும் என மகாகவி பாரதியார் கூறியுள்ளார்.

இந்தியாவில், பெண்கள் சக்தியானது அனைத்து துறைகளிலும் புதிய உச்சத்தை தொடுகிறது. கிராமங்களில் வசிக்கும் பெண்களால் ட்ரோன்களை இயக்க முடியுமா? என கேள்வி எழுந்தது. ஆனால், இன்று அதுவும் சாத்தியமாகி உள்ளது.

இயற்கை விவசாயம், நீர் சேகரிப்பு மற்றும் தூய்மைப்பணிகளில் பெண்களின் தலைமைப்பண்பு வெளிவந்துள்ளது. ரசாயனங்களால், நமது அன்னை பூமியானது அவதிப்பட்டது. வேதனையடைந்தது. ஆனால், நமது பூமியை காப்பதில் பெண்கள் சக்தி முக்கிய பங்கு வகித்தது. நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் இயற்கை வேளாண்மையில் பெண்கள் ஈடுபட்டு உள்ளனர். மேலும் தண்ணீர் சேகரிப்பில் நமது சகோதரிகள் மற்றும் பெண்கள் முழுமுயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களவைத்தேர்தலையொட்டி 3 மாதங்களுக்கு மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பப்படாது. மீண்டும் மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பும்போது அது 111வது நிகழ்சியாக தொடங்கும். பாரதிய ஜனதா வென்ற பிறகு மீண்டும் மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பப்படும்.

மக்களவைத்தேர்தலில் முதல்முறை வாக்காளர்கள் தங்களது வாக்குகளை தவறாமல் செலுத்த வேண்டும். தங்களது கனவுகளை நனவாக்க இளைஞர்கள் வாக்குரிமைகளை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்