பிரிவினையால் ஏற்பட்ட வரலாற்றின் மனிதாபிமானமற்ற அத்தியாயத்தை மறக்க முடியாது- அமித் ஷா
ஆகஸ்ட் 14ந் தேதியை பிரிவினை பயங்கர நினைவு நாளாக பாஜக அனுசரித்து வருகிறது.
புதுடெல்லி,
இங்கிலாந்து காலனி ஆதிக்கத்தில் இருந்து 1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றபோது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினை உண்டானது. இதுபற்றி பிரதமர் மோடி கடந்த ஆண்டு குறிப்பிடும்போது, பிரிவினையின் வலியை ஒருபோதும் மறந்து விடமுடியாது.
நமது லட்சக்கணக்கான சகோதர, சகோதரிகள் புலம் பெயர்ந்தனர். முன்பின் யோசிக்காமல் ஏற்பட்ட வெறுப்பு மற்றும் வன்முறையால் எண்ணற்றோர் உயிரிழந்தனர். நம்முடைய மக்களின் போராட்டங்கள் மற்றும் தியாகங்கள் ஆகியவற்றின் நினைவாக ஆகஸ்டு 14-ந்தேதி பிரிவினை பயங்கர நினைவு நாளாக அனுசரிக்கப்படும் என கூறினார்.
இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 14ந் தேதியை பிரிவினை பயங்கர நினைவு நாளாக பாஜக அனுசரித்து வருகிறது. இந்நிலையில் பிரிவினை கொடுமை நினைவு தினத்தில், 1947ல் பிரிவினையால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை மந்திரி அமித் ஷா, தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "1947ல் நடந்த நாட்டின் பிரிவினையால் ஏற்பட்ட இந்திய வரலாற்றின் மனிதாபிமானமற்ற அத்தியாயத்தை என்றும் மறக்க முடியாது. பிரிவினையின் வன்முறை மற்றும் வெறுப்பு லட்சக்கணக்கான உயிர்களைக் கொன்றதுடன், எண்ணற்ற மக்கள் இடம் பெயரக் காரணமானது.
பிரிவினையின் கொடூர நினைவு தினமான இன்று, பிரிவினையால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்கு தலைவணங்குகிறேன். பிரிவினையின் போது மக்கள் அனுபவித்த சித்திரவதைகள் மற்றும் வலிகளை நாட்டின் இளம் தலைமுறையினருக்கு நினைவூட்டுவதாகவும், நாட்டில் எப்போதும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணுவதற்கு நாட்டு மக்களை ஊக்குவிக்கவும் இந்த நினைவு தினம் அமையும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.