முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ராகுல்காந்தி பதிவு

நமது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவோம் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

Update: 2024-06-26 11:09 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவை தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியது. பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3-வது முறையாக ஆட்சியமைத்துள்ளது.

இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், எம்.பி.யாக நேற்று முன்தினம் பதவியேற்று கொண்டனர். அவர்களில் மீதமிருந்தவர்கள் நேற்று எம்.பி.க்களாக பதவி பிரமாணம் செய்து கொண்டனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் அரசியல் சாசன நகல் ஒன்றை கையில் பிடித்தபடி எம்.பி.யாக நேற்று பதவியேற்று கொண்டார்.

அதனைத்தொடர்ந்து, நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என காங்கிரஸ் செயற்குழு தீர்மானம் இயற்றியது. இதனை ராகுல் காந்தி ஏற்று கொண்டார். இதனை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டார்.

நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ராகுல்காந்தி எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

நன்றி எனது அன்புச்சகோதரர் ஸ்டாலின் அவர்களே.. தெற்கில் இருந்து வடக்கு வரை இந்தியாவின் ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிப்பதை உறுதி செய்வோம். மேலும் நமது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவோம் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்