பயங்கரவாதி ஷாரிக்கை, சிவமொக்காவுக்கு அழைத்து வந்து விசாரணை

துங்கா ஆற்றங்கரையோரத்தில் குண்டுவெடிப்பு சோதனை தொடர்பாக பயங்கரவாதி ஷாரிக்கை, சிவமொக்காவுக்கு அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Update: 2023-03-10 06:45 GMT

சிவமொக்கா-

மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே நாகுரி பகுதியில் கடந்த ஆண்டு (2022) நவம்பர் மாதம் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் பயங்கரவாதி ஷாரிக், ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இந்த குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

என்.ஐ.ஏ. அதிகாரிகளின் விசாரணையில் ஷாரிக் பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அவர், தென்னிந்தியாவில் பயங்கரவாத அமைப்பை நிறுவ ஆள் சேர்த்து வந்ததும், பல்வேறு நாச வேலையில் ஈடுபட சதி திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. இதற்காக கேரளாவில் தங்கி இருந்து பார்சலில் வெடிப்பொருட்கள் பெற்று வந்துள்ளார். மேலும், அவருக்கு மத்திய மற்றும் கிழக்கு ஆசியாவில் இருந்து டார்க்நெட் இணையதளம் மூலம் பணமும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அவர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்பு இருந்ததும் தெரியவந்தது.

சிவமொக்காவுக்கு அழைத்து...

மங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் ஷாரிக் பூரண குணமடைந்த நிலையில், அவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், துங்கா ஆற்றங்கரையோரத்தில் குண்டுவெடிப்பு சோதனை நடந்த வழக்கிலும் ஷாரிக்கிற்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில், இந்த குண்டுவெடிப்பு சோதனை தொடர்பாக, என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஷாரிக்கை சிவமொக்காவுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று முன்தினம் ஷாரிக்கை சிவமொக்காவுக்கு அழைத்து சென்றனர். பின்னர் குண்டுவெடிப்பு சோதனை நடத்திய துங்கா ஆற்றங்கரையோரம் மற்றும் அரசு பஸ் நிலையம் அருகே அவர் தங்கி இருந்த விடுதிக்கும் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஷாரிக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பெங்களூருவுக்கு அழைத்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்