பயங்கரவாத, போதை பொருள் கடத்தல் வழக்குகள்; 6 மாநிலங்களில் 100 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

அரியானா, உத்தர பிரதேசம் உள்பட 6 மாநிலங்களில் 100 இடங்களில் பயங்கரவாதம் மற்றும் போதை பொருள் கடத்தல் தொடர்புடைய வழக்குகளில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை நடத்தி உள்ளது.;

Update: 2023-05-17 10:22 GMT

புதுடெல்லி,

நாட்டில் பயங்கரவாதம் மற்றும் போதை பொருள் கடத்தல் உள்ளிட்டவற்றுடன் தொடர்புடைய வழக்குகளில் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை கடந்த ஆண்டு தனித்தனியாக 3 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இதில் நடப்பு ஆண்டு ஜனவரி 25-ந்தேதி தீபக் ரங்கா என்ற முக்கிய புள்ளியை என்.ஐ.ஏ. கைது செய்தது. பஞ்சாப்பின் மொகாலி நகரில் உளவு பிரிவு தலைமையகம் மீது தாக்குதல் நடத்திய வழக்குடன் தொடர்புடைய நபர் இவர். 2022-ம் ஆண்டு மே மாதம் வழக்கு பதிவானது.

விசாரணை முடிவில், கனடா, பாகிஸ்தான் நாட்டு கும்பலுக்கு இதில் தொடர்புள்ளது வெளிச்சத்திற்கு வந்தது.

கனடாவை சேர்ந்த தாதாவாக இருந்து பயங்கரவாதியான லக்பீர் சிங் சந்து என்ற லண்டா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த தாதாவாக இருந்து பயங்கரவாதியான ஹர்வீந்தர் சிங் சந்து என்ற ரிண்டா ஆகியோரது நெருங்கிய கூட்டாளி தீபக் ரங்கா என்பது தெரிய வந்தது.

இதுதவிர்த்து, ரங்காவுக்கு பல்வேறு வன்முறை சம்பவங்களுடனும், எண்ணற்ற பயங்கரவாத மற்றும் குற்ற சம்பவங்களுடனும் தொடர்பு உள்ளது. லண்டா மற்றும் ரிண்டா ஆகியோரிடம் இருந்து ரங்காவுக்கு அவ்வப்போது பயங்கரவாத செயல்களுக்கான நிதி கிடைத்து வந்தது. ஆயுதங்கள் உள்ளிட்ட ஆதரவும் கிடைத்து உள்ளது.

வெளிநாடுகளில் இருந்து கொண்டு பின்னணியாக செயல்பட்டு, நாட்டின் வடமாநிலங்களில் குறிப்பிட்ட வன்முறை தாக்குதல்கள் மற்றும் குற்ற செயல்களில் இந்த கும்பல் மறைமுக பாணியில் இயங்கி வந்து உள்ளது. இதுபற்றி அறிந்து, கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பரில் என்.ஐ.ஏ. வழக்கு பதிவு செய்தது.

பயங்கரவாதத்திற்கு தேவையான பொருட்களான ஆயுதங்கள், வெடிபொருள், வெடிகுண்டுகள், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் உள்பட பல கடத்தல்களில் இந்த நெட்வொர்க்கில் உள்ள கும்பல் ஈடுபட்டு உள்ளது. எல்லை பகுதிகளில் தீவிரமுடன் செயல்பட்டு உள்ளது.

இதுதவிர, உள்நாட்டிலேயே சட்டவிரோத வகையில் ஆயுதங்கள், வெடிபொருள், வெடிகுண்டுகள் ஆகியவற்றை தயாரித்து, விநியோகித்து, கடத்தலில் ஈடுபடும் கும்பலுடன் தொடர்பிலும் இருந்து உள்ளது அதிரடி விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

இந்த வழக்குகளில் முன்பே கும்பலின் பல்வேறு உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் என 19 பேரை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, அரியானா, உத்தரகாண்ட், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் 100 இடங்களில் பயங்கரவாதம் மற்றும் போதை பொருள் கடத்தல் தொடர்புடைய வழக்குகளை பற்றி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை தொடங்கி அதிரடி சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்