கடந்த 10 ஆண்டுகளில் தெலுங்கானா அபரிமிதமான வளர்ச்சியை பெற்றிருக்கிறது - முதல்-மந்திரி சந்திரசேகர ராவ்

கடந்த 10 ஆண்டுகளில் தெலுங்கானா அபரிமிதமான வளர்ச்சியை பெற்றிருக்கிறது என முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-03 20:00 GMT

தெலுங்கானா உருவான தினம்

தெலுங்கானா மாநிலம் உருவான 10-வது ஆண்டு விழா, ஐதராபாத் தலைமைச்செயலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் பங்கேற்று தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

இதையடுத்து சந்திரசேகர ராவ் பேசியதாவது:-

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்

தெலுங்கானாவில் ஒரு காலத்தில் குழாய்கள் மூலம் தண்ணீர் வழங்குவது கேள்விக்குறியாக இருந்தது. தெலுங்கானா மாநிலம் உருவானபோது நான் மக்களிடம் ஒரு வாக்குறுதி கொடுத்தேன். அது இன்று நிறைவேறி இருக்கிறது. 'மிஷன் பகீரதா' திட்டத்தின் மூலம் மாநிலத்தில் உள்ள 100 சதவீத மக்களுக்கும் குழாய் மூலம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்தமான குடிநீர் வழங்குவதின் மூலம் நாட்டிலேயே முதன் மாநிலமாக தெலுங்கானா விளங்குகிறது. இந்த திட்டம் இன்றும் தேசிய அளவில் முழுமை பெறவில்லை. குஜராத், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் கூட பின்னுக்கு தான் இருக்கின்றன.

மிகப்பெரிய வளர்ச்சி

மத்திய நீர் மின்சாரத்துறையின் கீழ் இயங்கும் குடிநீர் மற்றும் துப்புரவு பணியின் நீர் தர தகவல் அறிக்கையின்படி, தெலுங்கானாவில் மட்டும் 99.95 சதவீத அளவுக்கு குடிநீரின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் 'மிஷன் பகீரதா', தேசிய நீர் இயக்க விருது, 'ஜல் ஜீவன்' விருது உள்ளிட்ட பல விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

'மிஷன் பகீரதா' திட்டத்தால் இன்று குடிநீருக்காக மைல் கணக்கில் மக்கள் குடத்தில் குடங்களை சுமந்து செல்லும் காட்சிகள் இல்லை. மக்கள் தர்ணா இல்லை. மாநிலத்தில் எங்கும் 'புளூரைடு' பாதிப்பு இல்லை. விவசாயிகளை பொறுத்தவரையில் கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளனர். விளைச்சலில் மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுள்ளோம். அந்தவகையில், தேசிய உற்பத்தியில் தெலுங்கானா மிக முக்கிய இடத்தைப் பெற்று வருகிறது.

பனை எண்ணெய் சாகுபடி

பனை எண்ணெய் சாகுபடிக்கு தெலுங்கானா நிலங்கள் மிகவும் ஏற்றதாக அரசு கண்டறிந்துள்ளது. லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பாமாயிலை இறக்குமதி செய்யும் நம் நாட்டில், பனை எண்ணெய் சாகுபடி மிகவும் லாபகரமானது. விவசாயிகள் பயன்பெறும் வகையில் பனை எண்ணெய் சாகுபடியை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது. தெலுங்கானா உருவானபோது, மாநிலத்தில் 32 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே பனை எண்ணெய் பயிரிடப்பட்டது. இன்று 1 லட்சத்து 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது. இப்பயிர் சாகுபடி பரப்பை 20 லட்சம் ஏக்கராக அதிகரிக்க வேளாண் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தெலுங்கானா அரசு விவசாயிகளின் சுயமரியாதையை வெளிப்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் ஒவ்வொரு 5 ஆயிரம் ஏக்கருக்கு ஒன்று என மொத்தம் 2 ஆயிரத்து 601 'ரித்து வேதிகா'க்கள் என்ற உழவர் மேடை வழிகாட்டிகளை நிறுவியுள்ளது. இவ்வாறு வேளாண் மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் தெலுங்கானா மாநில அரசு தேசிய அளவில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்துகொண்டோர்

விழாவில், தலைமைச்செயலாளர் சாந்தி குமாரி, போலீஸ் டி.ஜி.பி. அஞ்சனி குமார், சந்தோஷ் குமார் எம்.பி. மற்றும் எம்.சி., எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்