கவர்னருக்கு எதிரான தெலங்கானா அரசு வழக்கு: மார்ச் 20-ந் தேதி விசாரணைக்கு பட்டியலிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
கவர்னருக்கு எதிரான தெலங்கானா அரசு வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.;
புதுடெல்லி,
தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் அரசுக்கும், கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதற்கிடையில் தெலுங்கானா சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர்காலம் தாழ்த்தி வருவதாக குற்றம் சாட்டினர்.
மேலும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கவர்னர் தமிழிசைக்கு உத்தரவிடக்கோரி தெலுங்கானா அரசு சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவில், தெலுங்கானா அரசு, கவர்னரின் செயல்பாடுகள் வழக்கத்திற்கு மாறான, சட்டவிரோதமான, அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள உரிமைகளுக்கு எதிரான செயல் என அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த ரிட் மனு தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது முறையிட்ட மூத்த வழக்கறிஞர், 10 மசோதாக்கள் கவர்னர் தமிழிசையின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளதால் அவசர வழக்காக இதனை விசாரிக்க வலியுறுத்தினார். அதையடுத்து தெலுங்கானா அரசின் மனுவை வரும் 20ம் தேதிக்கு விசாரணைக்கு பட்டியலிட தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.