தெலுங்கானா முதல்-மந்திரி ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் அறிவுரைக்கேற்ப செயல்படுகிறார்; பா.ஜ.க. கடுமையான குற்றச்சாட்டு
தெலுங்கானா முதல்-மந்திரி ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப நடந்து கொள்கிறார் என பா.ஜ.க. கடுமையான குற்றச்சாட்டு கூறியுள்ளது.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநில தலைநகராக உள்ள ஐதராபாத், சுதந்திரம் பெறுவற்கு முன்பு நிஜாம்களின் அரசாட்சிக்கு உட்பட்டு இருந்தது. நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் 1948-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந்தேதி ஆபரேசன் போலோ என்ற பெயரில் காவல் துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் கீழ் ஒருங்கிணைந்த இந்தியாவுடன் ஐதராபாத் இணைக்கப்பட்டது.
ஐதராபாத் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன நிலையில், அதனை வரும் 17-ந்தேதி முதல் ஓராண்டுக்கு கொண்டாடுவது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 2022-ம் ஆண்டு, செப்டம்பர் 17-ந்தேதி முதல் 2023-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந்தேதி வரை, ஐதராபாத் சுதந்திர தினம் ஓராண்டுக்கு கொண்டாடப்பட உள்ளது.
இதனை மத்திய கலாசார துறை மந்திரி கிஷன் ரெட்டி இன்று கூறியுள்ளார். இதற்காக ஐதரபாத் நகரில் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ள தொடக்க நிகழ்ச்சியில் இணைந்து கொள்ள தெலுங்கானா, மராட்டியம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் முதல்-மந்திரிகளுக்கு அழைப்பு விடுத்து கடிதமும் எழுதியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கவுரவ விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார்.
எனினும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி பேசும்போது, செப்டம்பர் 17-ந்தேதியை தேசிய ஒருமைப்பாட்டு நாளாக மத்திய மற்றும் மாநில அரசுகள் கொண்டாட வேண்டும் என வலியுறுத்தினார். இதுபற்றி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் ஆகியோருக்கு 2 கடிதங்களை எழுதியுள்ளேன். தேசிய ஒருமைப்பாட்டு தினம் என்பது சுதந்திரம் என்ற வார்த்தைக்கு பதிலாக சரியான ஒன்றாக இருக்கும் என்று ஒவைசி கூறியுள்ளார்.
இந்நிலையில், தெலுங்கானா முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், வருகிற 16, 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் தெலுங்கானா தேசிய ஒருமைப்பாட்டு நாளை கொண்டாட தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது என தெரிவித்துள்ளது.
இதுபற்றி தெலுங்கானா பா.ஜ.க. தலைவர் பண்டி சஞ்சய் இன்று கூறும்போது, செப்டம்பர் 17-ந்தேதியை ஐதராபாத் சுதந்திர தினம் என கொண்டாட மத்திய அரசு முடிவு செய்தது. அனைத்து கட்சிகளும் அதற்கு பதிலளித்தன.
ஆனால், செப்டம்பர் 17-ந்தேதியை தேசிய ஒருமைப்பாட்டு நாளாக மத்திய மற்றும் மாநில அரசுகள் கொண்டாட வேண்டும் என ஒவைசி வலியுறுத்தியபோது, அதன்படி கொண்டாட மாநில அரசு முன்வந்துள்ளது.
முதல்-மந்திரி மற்றும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியினர், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியிடம் இருந்து அறிவுறுத்தல்களை பெற்று அதற்கேற்ப நடந்து கொள்கின்றனர் என சஞ்சய் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.