செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்
சிந்தாமணியில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு கொடுக்க வலியுறுத்தி செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோலார் தங்கவயல்:-
நிலம் ஆக்கிரமிப்பு
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா முருகமல்லி அருகே மூகலமரி கிராமத்தை சேர்ந்தவர் கங்கராஜூ. இவரது மகன்கள் நிகில், நித்தின், சதீஸ். இந்த நிலையில், கங்கராஜூ தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை மகன்களுக்கு எழுதி வைத்திருந்தார். இந்த நிலையில், அந்த நிலத்தை அதே கிராமத்தை சேர்ந்த தவவெங்கடப்பா, மல்லப்பா, நாராயணப்பா ஆகியோர் போலி பத்திரத்தை தயாரித்து அந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக தெரிகிறது.
இதுகுறித்து கோவிந்தராஜூவின் மகன்கள் தாசில்தாரிடம் புகார் கொடுத்தனர். ஆனால் அந்த ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க தாசில்தார் எந்த நடவடிக்கையும் எடுக்கவிவல்லை என தெரிகிறது.
தற்கொலை மிரட்டல்
இந்த நிலையில், நிகில் நேற்று அந்தப்பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறினார். பின்னா் அவர் போலி ஆவணங்கள் மூலம் எங்களுக்கு சொந்தமான நிலத்தை 3 பேர் ஆக்கிரமித்து உள்ளனர். அந்த நிலத்தை மீட்டு கொடுக்க தாசில்தாரிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆக்கிரமிக்கப்பட்ட எங்கள் நிலத்தை மீட்டு கொடுக்க வேண்டும். நிலத்தை மீட்டு கொடுக்காவிட்டால் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டல் விடுத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் சிந்தாமணி புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பேச்சுவார்த்தை
பின்னா் போலீசார், நிகிலிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் இதனை ஏற்க மறுத்த நிகில், தாசில்தார் உடனடியாக இங்கு வந்து உறுதி அளிக்க வேண்டும் என்றார். இதையடுத்து தாசில்தார் மஞ்சுநாத் அங்கு வரவழைக்கப்பட்டார். அப்போது அவரும், ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து நிகில் தற்கொலை முயற்சியை கைவிட்டு செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார். இதுகுறித்து போலீசார் நிகில் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.