அதிகளவு மாத்திரைகளை தின்று இளம்பெண் தற்கொலை
வாலிபரின் காதல் தொல்லையால் அதிகளவு மாத்திரைகளை தின்று இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் மைசூருவில் நடந்துள்ளது.;
மைசூரு:-
காதல் தொல்லை
மைசூரு மாவட்டம் இலவாலா போலீஸ் எல்லைக்குட்பட்ட கனகரகுந்தி கிராமத்தை சேர்ந்தவர் ஹர்ஷிதா (வயது 21). பி.யூ.சி. படித்து முடித்த அவர், மைசூருவில் உள்ள கம்ப்யூட்டர் மையத்துக்கு சென்று வந்தார். இந்த நிலையில் ஹர்ஷிதாவை அதே கிராமத்தை சேர்ந்த சிவு என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அவர் தினமும் ஹர்ஷிதாவை பின்தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
மேலும் அவர், தன்னை காதலிக்கும்படியும், திருமணம் செய்துகொள்ளும்படியும் ஹர்ஷிதாவுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. ஆனால் அவரை காதலிக்கவும், திருமணம் செய்துகொள்ளவும் ஹர்ஷிதா நிராகரித்து வந்துள்ளார்.
தற்கொலை
இந்த நிலையில் ஹர்ஷிதாவுக்கு திருமணம் செய்யபெற்றோர் ஏற்பாடு செய்து வந்துள்ளனர். மேலும் கன்னட ஆடி மாதம் முடிந்த பிறகு திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தனர். ஆனாலும், சிவுவின் காதல் தொல்லை அதிகரித்து சென்றதால் மனமுடைந்த ஹர்ஷிதா, தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த மாத்திரைகளை அதிகளவு தின்று தற்கொலை செய்துகொண்டார்.
இதனை அறிந்த அவரது குடும்பத்தினர், ஹர்ஷிதாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் இலவாலா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் வலைவீச்சு
இதுகுறித்து ஹர்ஷிதாவின் பெற்றோர், சிவு மீது இலவாலா போலீசில் புகார் அளித்தனர். இதற்கிடையே சிவு தலைமறைவாகி விட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சிவுவை வலைவீசி தேடி வருகிறார்கள்.