பகவத் கீதையின் போதனைகள் உலகம் முழுவதும் சென்றடைய வேண்டும் - அமித்ஷா பேச்சு
பகவத் கீதை மகா உற்சவம் அதன் நோக்கங்களை நிறைவேற்றி உள்ளது என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.
குருஷேத்ரா,
மகாபாரத போர் நடந்த இடமாகக் கருதப்படும் அரியானாவின் குருஷேத்ராவில் ஆண்டுதோறும் பகவத் கீதை மகா உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டின் சர்வதேச பகவத் கீதை மகா உற்சவம் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. வரும் 24-ம் தேதி நிறைவடைகிறது.
இந்த நிலையில், பகவத் கீதை மகா உற்சவ நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது:-
வருடாந்திர சர்வதேச பகவத் கீதை மகா உற்சவம் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்பினார். அதனை கடந்த 2016 முதல் அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் நிறைவேற்றிக் காட்டி வருகிறார்.
பகவத் கீதையின் போதனைகள் நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும், உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்றடைய வேண்டும். கடந்த 2016 முதல் பகவத் கீதை மகா உற்சவம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக பகவத் கீதை மகா உற்சவம் அதன் நோக்கங்களை நிறைவேற்றி உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.