கர்நாடகத்தில் பாக்கு மரங்களை தாக்கும் நோய்களை தடுக்க தனிக்குழு; மந்திரி அரக ஞானேந்திரா பேட்டி
கர்நாடகத்தில் பாக்கு மரங்களை தாக்கும் நோய்களை தடுக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.
சிக்கமகளூரு:
சண்டிகா யாகம்
சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பாக்கு பயிரிடப்பட்டுள்ளது. ஆனால் பாக்கு மரங்கள் மஞ்சள் இலை நோய் தாக்கி பாதிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் விளைச்சல் இல்லாமல் பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில், பாக்கு தோட்ட விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க ேவண்டும் என்றும், நஷ்டம் அடையாமல் இருக்க வேண்டும் என்றும் சாரதம்மா கோவிலில் சண்டிகா யாகம் நடந்தது.
இதில், போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கலந்துகொண்டார். இந்த பூஜை முடிந்ததும் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தனிக்குழு
சிக்கமகளூரு மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், பாக்கு விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு தற்கொலை ெசய்து கொள்கிறார்கள் என்ற ஆதாரம் எதுவும் இல்லை. விவசாயத்தில் நஷ்டம் ஏற்படுவது சகஜம் தான். ஆனால் விவசாயிகள் தன்னம்பிக்கையை கைவிடக்கூடாது. பாக்கு மரங்களை தாக்கும் மஞ்சள் இலை நோயை தடுக்க மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாக்கு மரங்களை தாக்கும் நோய்களை தடுக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக பூச்சி கொல்லி மருந்துகளை தயாரிக்க விஞ்ஞானிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கு மானிய விலையில் பூச்சிக்கொல்லி மருந்து வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.