கர்நாடகம் முழுவதும் 5 கோடி மரக்கன்று நட இலக்கு வனத்துறை மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே பேட்டி
வனத்துறை சார்பில் கர்நாடகம் முழுவதும் 5 கோடி மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே தெரிவித்துள்ளார்.
குடகு-
வனத்துறை சார்பில் கர்நாடகம் முழுவதும் 5 கோடி மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே தெரிவித்துள்ளார்.
மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே
கர்நாடக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே நேற்று குடகிற்கு வந்தார். குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா கொட்லிபேட்டையில் நடந்த விழாவில் அவர் கலந்துகொண்டார். பின்னர் அரசு பள்ளிக்கு சென்ற மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே, சுற்றுச்சூழல் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், கழிவு பொருட்கள், பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமை குறித்தும் பேசினார். பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார். பின்னர் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அனைவரும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் கொண்டாட வேண்டும். ரசாயனம் இல்லாத களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை அனைவரும் பயன்படுத்த வேண்டும். ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பண்டிகையை அனைவரும் கொண்டாட வேண்டும்.
5 கோடி மரக்கன்றுகள்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக்காக இந்த ஆண்டு கர்நாடகம் முழுவதும் வனத்துறை சார்பில் 5 கோடி மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.