தமிழக மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம்; இரு மாநில பிரச்சினையாக பெரிதுபடுத்த வேண்டாம் - ஆந்திர போலீஸ் அதிகாரி வேண்டுகோள்
தமிழக மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை இரு மாநில பிரச்சினையாக பெரிதுபடுத்த வேண்டாம் என்று ஆந்திர போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
ஐதராபாத்,
ஆந்திராவின் திருப்பதியில் உள்ள சட்டக்கல்லூரியில் படிக்கும் தமிழக மாணவர்கள் சிலர் வாகனங்கள் மூலமாக சென்று நேற்று முன்தினம் தேர்வு எழுதினர். பின்னர் அங்கிருந்து புத்தூர் வடமலைப்பேட்டை சுங்கச்சாவடி வழியாக சென்னை திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது சுங்கக்கட்டணம் செலுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியது. இதில் தமிழக மாணவர்கள் மீது சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த சில மாணவர்கள் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டனர். ஆந்திர போலீசாரின் முன்னிலையிலேயே இந்த தாக்குதல் நடந்ததாக தெரிகிறது.
இதுதொடர்பாக திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வரரெட்டி நிருபர்களிடம் கூறும்போது, ''இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்சினை என சமூகவலைத்தளங்களில் செய்திகள் உலா வருகின்றன. இந்த சம்பவத்தை இரு மாநில பிரச்சினையாக பெரிதுபடுத்த வேண்டாம். ஆந்திராவுக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே சுமுக உறவு நீடிக்கிறது'' என்று தெரிவித்தார்.