அகஸ்தியர் மலைக்கு டிரக்கிங் சென்ற சென்னை நபர் மாரடைப்பால் மரணம்
அகஸ்தியர் மலையில் ஏறியபோது ரமேசுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.;
திருவனந்தபுரம்,
சென்னையை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 55). இவர் தனது 3 நண்பர்களுடன் சேர்ந்து அகஸ்தியர் மலைக்கு (அகஸ்தியர் கூடம்) டிரக்கிங் சென்றுள்ளார். ரமேஷ் நண்பர்களுடன் கேரளாவில் இருந்து அகஸ்தியர் மலையில் ஏறியுள்ளார்.
3 நாட்கள் டிரக்கிங் பயணம் கடந்த புதன்கிழமை காலை தொடங்கியுள்ளது. அகஸ்தியர் மலையின் பனகட் முகாமில் இருந்து டிரக்கிங் பயணம் தொடங்கிய நிலையில் முடிசந்தேரி பகுதிக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. நண்பர்களுடன் சேர்ந்து மலையேறிய நிலையில் மலை உச்சியில் மாலை 4.30 மணியளவில் நடந்துகொண்டிருந்தபோது ரமேசுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மலையிலேயே ரமேஷ் உயிரிழந்தார்.
மலையில் வாகன வசதி இல்லாததால் ரமேசின் உடலை அவரது நண்பர்களும், வனத்துறையினரும் அடிவார முகாமிற்கு சுமந்து வந்தனர். இதையடுத்து, ரமேசின் உடல் விதுரா தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், அங்கிருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளது. அகஸ்தியர் மலைக்கு டிரக்கிங் சென்ற சென்னை நபர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.