தமிழக அரசு தொலைதூர பஸ்களில் குறைந்த கட்டணத்தில் பார்சல் சேவை

பெங்களூருவில் இருந்து இயக்கப்படும் தமிழக அரசு தொலைதூர பஸ்களில் குறைந்த கட்டணத்தில் பார்சல் சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக கண்காணிப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-09 17:17 GMT

பெங்களூரு

தமிழக விரைவு பஸ்கள்

தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பயணிகள் வசதிக்காக பெங்களூரு சாந்திநகர் பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்திற்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களுக்கு இருமாநிலங்களை சேர்ந்தவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் மாநில விரைவு போக்குவரத்து கழகம் (எஸ்.இ.டி.சி.) சார்பில் இயக்கப்படும் பஸ்களில் பார்சல் சேவையை தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி பெங்களூருவில் இருந்து சேலம், மதுரை, சென்னை, செங்கோட்டை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமாரி, மார்த்தாண்டம், திருவனந்தபுரம், ஊட்டி, கோவை, குமுளி உள்ளிட்ட தொலைதூர பகுதிகளுக்கு இயக்கப்படும் தமிழக பஸ்களில் பார்சல் மூலம் பொருட்கள் கொண்டு செல்வதற்கும், எடுத்து வருவதற்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு சாந்திநகர் பஸ் நிலையத்தில் இயங்கி வரும் தமிழக அரசு பஸ் டிக்கெட் கவுண்ட்டர் கண்காணிப்பு அதிகாரியாக பணியாற்றும் அண்ணாமலை கூறியதாவது:-

பஸ்களில் பார்சல் சேவை

தமிழக பஸ்களில் எடுத்து செல்லும் டி.வி. போன்ற சில முக்கிய பொருட்களுக்கு இதுநாள் வரை முழு டிக்கெட் கட்டணமாக வசூல் செய்யப்பட்டது. இதனால் டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது வந்தது. மேலும், தங்கள் பொருட்களை பஸ்களில் எடுத்து செல்வதற்கான கட்டணம் அதிகமாக உள்ளதாக மக்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் தமிழக அரசு பஸ்களில் பொருட்களை பார்சல் முறையில் கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியது.

இதையடுத்து அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவனின் வழிகாட்டுதலின் பேரில், பெங்களூருவில் இருந்து புறப்படும் தமிழக அரசு பஸ்களில் வியாபாரிகள் உள்பட பலரும் தங்கள் பொருட்களை வேண்டிய இடங்களுக்கு குறைந்த கட்டணத்தில், மிக குறுகிய நேரத்தில் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

ஜி.எஸ்.டி.யுடன் கட்டணம்

இந்த புதிய திட்டத்தால் தமிழக அரசின் போக்குவரத்து கழகத்திற்கு வருமானம் அதிகரிப்பதுடன், பயணிகள் தங்கள் பொருட்களை எந்த பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக கொண்டு செல்ல முடிகிறது. மக்கள் கொண்டு வரும் பொருட்கள் முதலில் எடை பார்க்கப்பட்டு, பின்னர், எடைக்கு ஏற்றவாறு குறைந்த கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. 20 கிலோ எடை ஒரு யூனிட் என்ற விகிதத்தில் 400 முதல் 450 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.70 மற்றும் ஜி.எஸ்.டி. தொகை வசூல் செய்யப்படுகிறது.

இதேபோல் 500 முதல் 600 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.80 முதல் ரூ.100 மற்றும் ஜி.எஸ்.டி. தொகை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும். 700 முதல் 800 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.100 முதல் ரூ.120 மற்றும் ஜி.எஸ்.டி. தொகை வசூல் செய்யப்படுகிறது. இதில் எடை குறைவான பூ, இலை மற்றும் இதர பொருட்கள் 10 கிலோ ஒரு யூனிட் என்ற முறையில் கணக்கிடப்பட்டு, கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்