10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் கட்டாயம்: மொழி சிறுபான்மையின மாணவர்களுக்கு மேலும் ஓராண்டுக்கு விலக்கு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் தேர்வை எழுத மொழிவாரி சிறுபான்மையின மாணவர்களுக்கு மேலும் ஓராண்டுக்கு விலக்கு அளிக்க தமிழ்நாடு அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-02-07 02:33 GMT



புதுடெல்லி,

தமிழ்நாடு அரசு 2006-ம் ஆண்டு கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை கொண்டுவந்ததன் வாயிலாக, அனைத்து பள்ளிகளிலும் முதல் பாடமாக தமிழ் கட்டாயமாக்கப்பட்டது. இதனால் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது உள்ளிட்ட பிறமொழி பள்ளி மாணவர்களும் பொதுத்தேர்வில் தமிழ் தேர்வை கட்டாயம் எழுத வேண்டியுள்ளது.

இதற்கு எதிராக விலக்கு கோரி தமிழ்நாடு மொழிவாரி சிறுபான்மையினர் சங்கத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன் நேற்று நடைபெற்றது.

அப்போது, தமிழ்நாடு தவிர்த்து ஏனைய மாநிலங்களில் மும்மொழி கொள்கை அமலில் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும்தான் இருமொழி கொள்கை அமலில் இருக்கிறது. இதனால் மொழிவாரி சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தமிழ்நாடு மொழிவாரி சிறுபான்மையினர் சங்கத்தின் சார்பில் வாதிடப்பட்டது.

2022-23 கல்வியாண்டில், மனுதாரர் பிரதிநிதித்துவப்படுத்தும் 863 மாணவர்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்க முடியும் என தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட சுப்ரீம் கோர்ட்டு, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் தேர்வு எழுத மொழிவாரி சிறுபான்மையின மாணவர்களுக்கு மேலும் ஓராண்டுக்கு விலக்கு அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்