சுவாதி மாலிவால் விவகாரம்: ஜாமீன் கோரி கெஜ்ரிவாலின் உதவியாளர் டெல்லி ஐகோர்ட்டில் மனு

சுவாதி மாலிவாலை தாக்கிய வழக்கில் கைதான பிபவ் குமார் ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.;

Update: 2024-06-12 14:51 GMT

Image Courtesy : ANI 

புதுடெல்லி,

ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை எம்.பி. சுவாதி மாலிவால். இவர் கடந்த மாதம் 13-ந்தேதி காலை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றபோது, கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக டெல்லி போலீசில் சுவாதி மாலிவால் அளித்த புகாரில், கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை 8 முறை கன்னத்தில் அறைந்ததாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரை கடந்த மாதம் 18-ந்தேதி டெல்லி போலீசார் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் பிபவ் குமார் தாக்கல் செய்த மனுவை நீதிபதி சுஷீல் அனுஜ் தியாகி கடந்த மாதம் 27-ந்தேதி விசாரித்தார். அப்போது, புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள சம்பவம் நடைபெற்ற சமயத்தில் பிபவ் குமார் முதல்-மந்திரி இல்லத்தில் இல்லை என்றும், சுவாதி மாலிவால் கூறியிருப்பது உண்மையில்லை என்றும் பிபவ் குமாரின் வழக்கறிஞர் வாதிட்டார்.

அதே சமயம் சுவாதி மாலிவால் தரப்பில், பிபவ் குமாருக்கு ஜாமீன் வழங்கினால் சுவாதி மாலிவாலுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என வாதிடப்பட்டது. இதையடுத்து கூடுதல் அமர்வு நீதிமன்றம், பிபவ் குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து டெல்லி திஸ் ஹசாரி கோர்ட்டில் பிபவ் குமார் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு கடந்த 7-ந்தேதி சிறப்பு நீதிபதி ஏக்தா கவுபா முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தற்போது வழக்கு விசாரணை தொடக்க நிலையில் இருப்பதாலும், சுவாதி மாலிவால் தரப்பில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்திருப்பதாலும் பிபவ் குமாரின் ஜாமீன் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தார். இதையடுத்து பிபவ் குமார் தற்போது டெல்லி ஐகோர்ட்டில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்