தூய்மை இந்தியா பயிற்சியில்...!! வைரலான வரிப்புலியின் வீடியோ
இந்த பாட்டிலை தூக்கி எறிந்தவருக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என ஒருவர் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
வனவாழ் புகைப்பட கலைஞர் தீப் கதிகார். காட்டு விலங்குகளின் அரிய புகைப்படங்களை படம் பிடிக்கும் வேலையை ஆர்வமுடன் செய்து வருகிறார். இந்த சூழலில், அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், தேசிய விலங்கான வரிப்புலி ஒன்று நடந்து செல்கிறது. நீர்நிலையின் மீது மிதந்து கொண்டிருக்கும் பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றை தன்னுடைய வாயால் கவ்வி தூக்குகிறது. பின்னர் அந்த வழியே நடந்து செல்கிறது. வரிப்புலியின் இனிமையான செயல்.
நம்முடைய வன பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க நாம் முயற்சிப்போம். பானுஷ்கிந்தி பெண் புலியின் குட்டி அது. ராம்தேகி மலை பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது என இன்ஸ்டாகிராமில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த வீடியோ பகிரப்பட்டதும் அதுபற்றி பலரும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். ஒரு சிலர் ஆச்சரியங்களையும், சிலர் வருத்தங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
ஒருவர், அழகான ஒரு வீடியோ. நம்முடைய காட்டின் மீது நாம் அன்பு செலுத்த வேண்டும். பிளாஸ்டிக் இல்லாத காடாக அதனை பாதுகாக்க முயற்சிக்க வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார்.
பல்வேறு தளங்களிலும், பிளாஸ்டிக் தடைக்கான தேவையை பற்றிய விழிப்புணர்வை இந்த வீடியோவானது ஏற்படுத்தி உள்ளது என மற்றொருவரும் தெரிவித்து உள்ளார்.
இந்த பாட்டிலை தூக்கி எறிந்தவருக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும். இந்த பாட்டிலை புலி எடுக்கிறது என பார்க்கும்போது வருத்தம் ஏற்படுகிறது.
பாட்டில் எப்படி இந்த பகுதியில் வந்தது? என்றும் இந்த பூமியை நம்முடைய விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் மற்றும் இயற்கை வளங்களை மனிதர்களாகிய நாம் எப்படி நடத்துகிறோம் என்பது சோகம் வரவழைக்கிறது என்று ஒருவரும் தெரிவித்து உள்ளார்.
தூய்மை இந்தியாவுக்கான பயிற்சியை வரிப்புலியானது எடுத்து வருகிறது. இந்த வீடியோவை அதிகம் பகிர வேண்டும் என்று மற்றொருவர் தெரிவித்து உள்ளார்.