எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் நாடாளுமன்ற வரலாற்றில் துரதிர்ஷ்டவசமானது - மாயாவதி
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.;
லக்னோ,
லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் மிகவும் கவலைக்குரிய விஷயம். நாடாளுமன்றத்தின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க விழிப்புடன் இருக்க வேண்டும்.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் சுமார் 140-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது வரலாற்றில் கவலைக்குரியதும், துரதிர்ஷ்டவசமான சம்பவமாகும். இது நாடாளுமன்ற வரலாற்றில் மக்களின் நம்பிக்கையை குலைக்கும் சம்பவம்.
இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் மாநிலங்களவைத் தலைவரை கேலி செய்யும் வைரலான வீடியோவும் பொருத்தமற்றது. முக்கியமான மசோதாக்களை எதிர்க்கட்சிகள் இன்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது நல்ல மரபு கிடையாது. நாடாளுமன்ற மரபுகளை அனைவரும் ஒன்றிணைந்து பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.