கெஸ்காம் என்ஜினீயர் பணி இடைநீக்கம்
உப்பள்ளியில் பணியில் அலட்சியத்தால் கெஸ்காம் என்ஜினீயர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உப்பள்ளி-
கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (மே) 10-ந் தேதி நடைபெறுகிறது. இந்தநிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் தார்வார் மாவட்ட தேர்தல் அதிகாரியாக மாவட்ட கலெக்டர் குருதத்த ஹெக்டே நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் மாவட்டத்தில் சட்டசபை தேர்தலுக்கான பணிகளை கவனித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் பணிக்கு அதிகாரிகள், ஊழியர்கள் வராமல் இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் உப்பள்ளி கெஸ்காம் (மின்சார துறையில்) என்ஜினீயராக இருக்கும் நாகராஜ் கலந்து கொள்ளவில்லை. மேலும் பணியில் அலட்சியமாக இருந்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து என்ஜினீயர் நாகராஜை பணி இடைநீக்கம் செய்து கலெக்டர் குருதத்த ஹெக்டே உத்தரவிட்டுள்ளார்.