ஜார்கண்ட் முதல்-மந்திரி தகுதியிழப்பு விவகாரம் : எம்.எல்.ஏ.க்களுடன் ஜார்கண்ட் முதல்-மந்திரி சுற்றுலா

ஜார்கண்டில் முதல்-மந்திரி தகுதியிழப்பு விவகாரம் விசுவரூபம் எடுக்கிறது. குதிரை பேரத்தை தடுக்க ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ.க்களுடன் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் சுற்றுலா சென்றார்.

Update: 2022-08-27 21:11 GMT

 

 

நிலக்கரிச்சுரங்க ஒதுக்கீட்டால் வினை

முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் (வயது 47) தலைமையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடந்து வருகிற ஜார்கண்ட் மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் அங்கு தனக்குத்தானே நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்த விவகாரம் விசுவரூபம் எடுத்து வருகிறது.

தகுதியிழப்பு செய்ய பரிந்துரை

இது தொடர்பாக தேர்தல் கமிஷன் விசாரணை நடத்தி, ஹேமந்த் சோரன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பதாக கருதி, அவரை தகுதி நீக்கம் செய்வதற்கு பரிந்துரை செய்து ஜார்கண்ட் கவர்னர் ரமேஷ் பயசுக்கு தேர்தல் கமிஷன் தனது அறிக்கையை கடந்த 25-ந் தேதி அனுப்பிவைத்தது.

அதை கவர்னர் ரமேஷ் பயஸ் பரிசீலித்து, ஹேமந்த் சோரனை எம்.எல்.ஏ. பதவியை விட்டு நீக்கி அது தொடர்பான அறிக்கையை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பிவைப்பார் என கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

3 பஸ்களில் சுற்றுலா

இந்த நிலையில் எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரத்தை தவிர்க்கவும், விலைபோய்விடாமல் இருப்பதை தடுக்கவும் ஹேமந்த் சோரன் அதிரடி நடவடிக்கையில் நேற்று இறங்கினார். அவரும், ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ.க்களும் 3 சொகுசு பஸ்களில் ராஞ்சியில் இருந்து புறப்பட்டுச்சென்றனர்.

ராஞ்சியில் இருந்து 30 கிமீ. தொலைவில் உள்ள லட்ராட்டுக்கு ஹேமந்த் சோரனும், ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ.க்களும் சென்றனர். அங்கு பகல் பொழுதை உல்லாசமாக கழித்துவிட்டு மாலையில் ராஞ்சி திரும்பினர்.

கவர்னர் நாளை முடிவு

தேர்தல் கமிஷன் பரிந்துரை அறிக்கை மீது கவர்னர் நாளை (திங்கட்கிழமை) முடிவு எடுப்பார் என கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags:    

மேலும் செய்திகள்