முதியவர் மீது பொய் வழக்குப்பதிவு செய்ததாக 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணி இடைநீக்கம்

பெங்களூருவில் முதியவர் மீது பொய் வழக்குப்பதிவு செய்ததாக 2 போலீஸ் இன்ஸ்பெக்டர் களை பணி இடைநீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் தயானந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Update: 2023-06-07 21:42 GMT

பெங்களூரு:

பெங்களூருவில் முதியவர் மீது பொய் வழக்குப்பதிவு செய்ததாக 2 போலீஸ் இன்ஸ்பெக்டர் களை பணி இடைநீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் தயானந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முதியவர் மீது பொய் வழக்கு

பெங்களூரு ஞானபாரதி போலீஸ் நிலையத்தில் கடந்த ஆண்டு (2022) இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் லட்சுமண் நாயக். இவர், தற்போது தேவனஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு ஞானபாரதி போலீஸ் நிலையத்தில் லட்சுமண் நாயக் பணியாற்றும் போது ஒரு முதியவர் மீது கடந்த ஆண்டு போதைப்பொருள் விற்றதாக வழக்குப்பதிவு செய்திருந்தார்.

அவர், தேவனஹள்ளிக்கு மாற்றப்பட்ட பின்பு புதிய இன்ஸ்பெக்டராக மஞ்சுநாத் பொறுப்பு வகித்து வந்தார். இதற்கிடையில், முதியவர் மீது பதிவான போதைப்பொருள் விற்ற வழக்கில், இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் தலைமையிலான போலீசார், கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தார்கள். அதே நேரத்தில் தான் போதைப்பொருள் விற்கவில்லை என்றும், தன் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ள தாகவும் முதியவர் குற்றச்சாட்டு கூறி இருந்தார்.

2 பேர் பணி இடைநீக்கம்

இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்பேரில், அதிகாரிகள் விசாரணை நடத்தி போலீஸ் கமிஷனர் தயானந்திடம் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.

அதில், முதியவர் மீது ஞானபாரதி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய லட்சுமண் நாயக் பொய் வழக்குப்பதிவு செய்திருந்ததும், இதுபற்றி விசாரிக்காமல் முதியவர் மீது சட்ட நடவடிக்கை எடுத்து தற்போது இன்ஸ்பெக்டராக இருக்கும் மஞ்சுநாத் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, பொய் வழக்குப்பதிவு செய்ததற்காக தேவனஹள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ள லட்சுமண் நாயக்கையும், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த ஞானபாரதி போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ள மஞ்சுநாத்தையும் பணி இடைநீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் தயானந்த் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்