மொபைல் போன் திருடன் என சந்தேகம்; 9 வயது சிறுவனை கிணற்றுக்குள் தொங்க விட்ட அவலம்

மத்திய பிரதேசத்தில் மொபைல் போன் திருடன் என்ற சந்தேகத்தில் 9 வயது சிறுவனை கிணறு உள்ளே கயிற்றில் தொங்க விட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-10-18 09:05 GMT



சத்தார்பூர்,


மத்திய பிரதேசத்தின் சத்தார்பூர் நகரில் லவகுஷ் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் 9 வயது சிறுவன் ஒருவனை மொபைல் போன் திருடிய சந்தேகத்தின் பேரில் அதே கிராமத்தில் வசிக்கும் சிலர் பிடித்து கொண்டு சென்றுள்ளனர்.

அந்த சிறுவனுக்கு தண்டனை தரும் நோக்கில், கிணறு ஒன்றிற்குள் கயிறு கட்டி தொங்க விட்டு உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் வசிப்போரிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி சிறுவனின் தந்தை போலீசில் புகார் அளித்து உள்ளார். கிணற்றுக்குள் கயிறில் தொங்க விடப்பட்ட நிலையில் இருந்த சிறுவனை குடும்பத்தினர்களில் ஒருவர் வீடியோ பதிவு செய்துள்ளார்.

இதுபற்றி போலீஸ் சூப்பிரெண்டு விக்ரம் சிங் கூறும்போது, சிறுவனை கட்டாயப்படுத்தி மொபைல் போன் திருடிய சந்தேகத்தில் கிணற்றுக்குள் தொங்க விட்டுள்ளனர் என சிறுவனின் தந்தை புகார் அளித்து உள்ளார்.

எங்களது போலீசார் புகாரை பெற்றதும் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்றனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என கூறியுள்ளார்.

எனினும், இந்த சம்பவம் பற்றி வீடியோ எடுத்த சிறுவனை போலீசார் அடித்துள்ளனர் என கூறப்படுகிறது. வீடியோ எடுத்ததற்காக அந்த சிறுவனை போலீசார் அறைந்தும், செருப்புகளை கொண்டு அடித்தும் உள்ளனர் என குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

ஆனால், அதுபோன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை என போலீஸ் சூப்பிரெண்டு மறுத்து உள்ளார். இந்த விவகாரத்துடன் தொடர்புடைய விசயம் பற்றி குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் புகார் அளித்தாலோ அல்லது ஏதேனும் விவகாரம் எங்களது கவனத்திற்கு வருமென்றால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்