பீகாரில் விஷ சாராயம் குடித்த 21 பேர் சாவு: சட்டசபையில் ஆளுங்கட்சி-பா.ஜ.க. மோதல்

பீகாரில் விஷ சாராயம் குடித்த 21 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக சட்டசபையில் ஆளுங்கட்சி-பா.ஜ.க. இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

Update: 2022-12-14 21:16 GMT

பாட்னா,

பீகார் மாநிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. ஆனால் அந்த மாநிலத்தின் பல பகுதிகளில் விஷ சாராய விற்பனை தாராளமாக நடைபெறுகிறது.

அதனால் மதுவிலக்கை தாண்டி உயிர்ப்பலிகள் தொடர்கின்றன. அங்குள்ள சரன் மாவட்டத்தில் மட்டும் இந்த ஆண்டு சுமார் 50 பேர் விஷ சாராயத்தால் உயிரிழந்திருக்கின்றனர்.

இந்நிலையில் அந்த மாவட்டத்தில் நேற்று முன்தினமும், நேற்றும் பலரின் உயிரை விஷ சாராயம் பறித்தது.

அங்குள்ள தோய்லா, யாது மோட் கிராமங்களில் அனுமதியின்றி விற்கப்பட்ட விஷ சாராயத்தை வாங்கி பலர் குடித்தனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு உடனடியாக உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் 21 பேர், நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையும் உயிரிழந்தனர். மேலும் பலருக்கு பார்வையிழப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த கிராமத்தினர், மாநில நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விஷ சாராய சாவு சம்பவம் சட்டசபையிலும் எதிரொலித்தது. விஷ சாராய விற்பனையை அரசு தடுக்கத் தவறிவிட்டதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் முழக்கமிட்டனர். பதிலுக்கு அவர்களை நோக்கி முதல்-மந்திரி நிதிஷ்குமார் கை நீட்டி ஆவேசமாக பேசினார். மாநிலத்தில் விஷ சாராய விற்பனையில் எதிர்க்கட்சியினர்தான் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

ஆளுங்கட்சி-பா.ஜ.க. இடையிலான கடும் மோதல் தொடர்ந்ததால், சட்டசபை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்பிறகும் கூச்சல், அமளி நீடித்தது. அதைத் தொடர்ந்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வரும் மேலும் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையில் மக்களவையில் நேற்று இந்த பிரச்சினையை பா.ஜ.க. எம்.பி.க்கள் ஜனார்தன் சிங் சிக்ரிவால், ரவி கிஷன் சுக்லா ஆகியோர் எழுப்பினர். சரன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்