டெல்லியில் காற்று மாசுபாடு மோசமடைந்து வருவது குறித்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணை!

டெல்லி முழுவதும் காற்றின் தரம் 'அபாயம்' என்ற நிலையில் நீடிக்கிறது. சில பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 500 என்ற அளவில் பதிவாகியுள்ளது.

Update: 2022-11-04 07:50 GMT

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் காற்று மாசு காரணமாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. மீறி வெடித்தால் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.இதனையும் மீறி பலர் பட்டாசுகள் வெடித்து தீபாவளி கொண்டாடியதால் தீபாவளி நாளில் உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லி மாறியது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே தலைநகர் டெல்லி அதனை சுற்றியுள்ள என் சி ஆர் பகுதிகளில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இதனால் சுவாசக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி டெல்லியின் காற்றின் தரக் குறியீடு 400 என்ற அளவில் பதிவாகியுள்ளது. அதாவது டெல்லி முழுவதும் காற்றின் தரம் தொடர்ந்து 'அபாயம்' என்ற நிலையில் நீடிக்கிறது. சில பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 500 என்ற அளவில் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், தலைநகர் டெல்லி அதனை சுற்றியுள்ள என் சி ஆர் பகுதிகளில் காற்று மாசுபாட்டைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.டெல்லியில் மோசமடைந்து வரும் காற்று மாசுபாடு குறித்த மனுவை இன்று சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை நவம்பர் 10ஆம் தேதி நடைபெறும் என்று தலைமை நீதிபதி லலித் தலைமையிலான அமர்வு தெரிவித்தது.

பஞ்சாப் போன்ற மாநிலங்களில் வைக்கோல் உள்ளிட்ட விவசாய கழிவு பொருட்கள் வெட்டவெளியில் பன்மடங்கு எரிக்கப்படுவதால் அண்டை பகுதியான டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்