ஆசை வார்த்தை கூறி உல்லாசம்: திருமணம் செய்ய மறுத்த வாலிபர்; பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஜோசியம் பார்க்க கூறிய நீதிமன்றம்...!
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு ஜாதகம் பார்க்க கூறிய அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு, தாமாக முன்வந்து உத்தரவுக்கு தடை விதித்து சுப்ரீம்கோர்ட்டு.;
புதுடெல்லி,
இந்தியாவில் சமீப காலமாக சில நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் சர்ச்சைக்குரியதாகவும் வினோதமானதாகவும் இருக்கிறது.
அந்த வகையில் சமீபத்தில் கர்நாடகா உயர்நீதிமன்றம் இறந்த பெண்ணின் சடலத்துடன் உடலுறவு கொள்வது தவறில்லை என உத்தரவு பிறப்பித்ததோடு குற்றம் செய்த நபரையும் விடுவித்தது. இந்நிலையில் உத்திர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரிடம் பலமுறை உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இந்தநிலையில் அந்த பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருப்பதாக கூறி அந்த வாலிபர் பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது.
இதனால் வாலிபர் மீது இளம் பெண் போலீசில் புகார் கொடுத்த நிலையில் அவர் ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது வாலிபர் பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருப்பதால் திருமணம் செய்து கொள்ள முடியாது எனக் கூறினார். அப்போது பெண்ணின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அந்த பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் கிடையாது என வாதிட்டார். இதைக் கேட்ட நீதிபதி பிரிஜ் ராஜ் சிங் அப்பெண்ணுக்கு உண்மையிலேயே செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்பது குறித்து கண்டறிய லக்னோ பல்கலைக்கழகத்தின் ஜோதிடத் துறை தலைவருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பான அறிக்கையை 10 நாட்களில் தன்னிடம் சமர்ப்பிக்க மாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு, அலகாபாத் நீதிமன்றத்தின் உத்தரவு கவலைக்குரியது எனக்கூறி அதற்கு தடை விதித்தது.